”பாகிஸ்தான் எப்போது தோற்கும் என்று பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்..” - கொந்தளித்த ஹாரிஸ் ராஃப்
2023 ஒருநாள் உலகக்கோப்பை தோல்வி, 2024 டி20 உலகக்கோப்பை தோல்வி மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் சொந்த மண்ணில் படுதோல்வி என ’தோல்வி தோல்வி தோல்வி...’ என்று மோசமாக சென்றுகொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி மீது முன்னாள் வீரர்கள் தொடங்கி, ரசிகர்கள் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி முடித்த கையோடு நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி, 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் முதலிய வீரர்கள் இடம்பெறாமல் இளம்வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
விமர்சிப்பவர்களை சாடிய ஹாரிஸ் ராஃப்..
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்துவரும் நிலையில், முதல் போட்டியில் 91 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான் அணி. இடம்பெற்றுள்ள இளம்வீரர்கள் ரன்களை சேர்க்க சிரமப்பட்டுவரும் நிலையில், இளம்வீரர்கள் கொண்ட அணிமீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் அணியை கட்டமைக்க விடுங்கள், இளம்வீரர்களை முன்னேற அனுமதியுங்கள் என்று வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “சர்வதேச கிரிக்கெட்டில் நுழையும் அனைவரும் ஆரம்பத்தில் சிரமப்படுகிறார்கள். நீங்கள் விமர்சனங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள், அது ஒரு வழக்கமாகிவிட்டது. எல்லோரும் உட்கார்ந்து பாகிஸ்தான் அணி தோற்கும் வரை காத்திருக்கிறார்கள், அதனால் அவர்கள் அதைப் பற்றிப் பேசலாம். அவர்களுக்கு அவர்களின் கருத்துக்கள் உள்ளன, ஆனால் நாங்கள் எங்கள் அணியை உருவாக்க முயற்சிக்கிறோம். நாங்கள் இளைஞர்களை சேர்க்க முயற்சிக்கிறோம், சீனியர்களும் இருக்கிறார்கள். சீனியர்களாக மாற எங்கள் ஜூனியர்களை ஊக்குவிக்கிறோம்.
நமது கிரிக்கெட் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் நாங்கள் ஒரு அணியாக மீண்டும் உருவெடுத்து, உயர் மட்டத்தில் தேவைப்படும் ஒரு கலவையை உருவாக்கி கிரிக்கெட்டை விளையாட முயற்சிக்கிறோம். நாங்கள் வெவ்வேறு விஷயங்களை முயற்சிக்கிறோம், அப்படி புதுமையாக ஒன்றை முயற்சிக்கும் போது தோல்விகள் ஏற்படும். அப்படி ஏற்பட்டால் நாங்கள் அதிலிருந்து கற்றுக்கொள்வோம். எதிர்காலத்தில் பாகிஸ்தான் அணியிடமிருந்து நல்ல கிரிக்கெட்டைக் காணும் ஒரு நாள் வரும்” என்று நம்பிக்கையுடன் பேசியுள்ளார் ஹாரிஸ் ராஃப்.