விசிக துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா நேற்றைய தினம் அக்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசிகவில் இணைந்தபோது எப்படி அக்கட்சியின் முக்கிய தூணாக மாறினாரோ, அதேபோல, புதிதாக துவங்கப்பட்டுள்ள தவெகவில் முக்கியப்பங்காற்றுவார் என்றும் தெரிகிறது. விசிகவில் நடப்பது என்ன... விரிவாக பார்க்கலாம்.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் தவெக தலைவர் விஜயோடு மேடை ஏறிய ஆதவ் அர்ஜுனா, பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அம்பேத்கர் குறித்து பேசத்தொடங்கி, தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும், பிறப்பால் ஒருவர் முதல்வர் ஆக்கப்படக்கூடாது என்றும் வெடித்துப் பேசினார் ஆதவ். அதே போல, விசிக தலைவர் திருமாவளவன் மேடையில் இல்லை எனினும், அவரது மனசாட்சி இங்குதான் இருக்கும் என்றும், மன்னராட்சி முறையை ஒழிக்க, 2026க்கான தேர்தல் வேலைகளை துவங்க வேண்டும் என்றும் அறிவித்தார் ஆதவ்.
வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் எனும் தேர்தல் வியூக நிறுவனத்தை நடத்தி வரும் ஆதவ், 2016 சட்டமன்ற தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் திமுகவுக்காக வேலை செய்திருக்கிறார். இதில், 2021 தேர்தலுக்காக வேலை செய்ய தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தவரே ஆதவ் அர்ஜுனாதான். இப்படியாக தொடர்ந்த பயணம், திருமாவால் ஈர்க்கப்பட்டு, அக்கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாடு, மது ஒழிப்பு மாநாடுகளை சிறப்பாக ஒருங்கிணைத்தார். கட்சியின் ஐடி விங்கை வலுப்படுத்தி இணைய அளவில் விசிகவுக்கு புது வடிவத்தை கொண்டுவந்தார் ஆதவ்.
இப்படி, ஆதவ்வின் செயல்பாடுகளைப் பார்த்து, கட்சியில் இணைந்த அவருக்கு துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பை கொடுத்து அழகுபார்த்தார் திருமா. ஆக, விசிகவில் திருமாவுக்குப் பிறகு, இளைஞர்களால் ஈர்க்கப்படும் இளம் தலைவராகவே உருவெடுத்தார் ஆதவ் அர்ஜுனா. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற விசிகவின் கொள்கையை எடுத்துப் பேசியதில் துவங்கி, உதயநிதி துணை முதல்வராகும்போது, இத்தனை ஆண்டுகளாக போராடி வரும் திருமா முதல்வராகக்கூடாதா என்று கேள்வி எழுப்பியது வரை நீண்டது ஆதவ்வின் ஆதங்கம். அதே ஆதங்கத்தைத்தான் விஜய்யுடனான மேடையில் பேசினார் ஆதவ். அவரது பேச்சை கேட்டபிறகு, 2026 தேர்தலில் தவெகவும், விசிகவும் இணைந்து களம் காண இருக்கின்றனவா? என்ற கேள்வியும் எழத்தான் செய்தது.
இதனிடையே, திமுக கூட்டணியில் இருந்துகொண்டு, அதனை எதிர்த்து பேசியது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்றைய தினம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் ஆதவ். திருமாவின் இந்த முடிவு குறித்து அறிக்கைவிட்ட ஆதவ், 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை' என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம் என்று அதிரடி காட்டி வருகிறார்.
இந்நிலையில் விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ், அக்கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன. காரணம், விசிகவில் தலைவர் திருமாவுக்கு ஆதவ்வின் முக்கியத்துவம் தெரிந்தாலும், இரண்டாம் கட்ட தலைவர்கள் ஆதவ்வுடன் இசைந்துபோவதாக தெரியவில்லை. கட்சிக்கு ஆதவ் செய்த பணிகள் குறித்த விவாதத்தில், ஆதவ் மட்டுமே விசிகவை தூக்கிப்பிடித்துவிடவில்லை என்று காட்டமாக பேசினர்.
மறுபுறம், பிப்ரவரியில் நடிகர் விஜய்யால் துவங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகம், 2026 தேர்தல் வெற்றியை இலக்காக நிர்ணயித்து பயணம் செய்து வருகிறது. முதல் மாநாடு, செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் என்று தொடங்கி, 2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிப்பது என்று வேகமெடுத்து வருகிறது தவெகவின் பயணம்.
இந்த நிலையில்தான், தேர்தல் வியூக நிறுவனமான வாய்ஸ் ஆஃப் காமன்ஸைக் கொண்டு, தவெகவுக்கு வியூகம் வகுக்க திட்டமிடுகிறாராம் ஆதவ். அதோடு, அக்கட்சியின் ஐடி விங்கை வலிமையாக கட்டமைத்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டவும் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அவரே சொன்னதுபோல, 2016, 2019 மற்றும் 2021ம் ஆண்டு என்று மூன்று தேர்தல் யுத்தங்களில் திமுகவுக்காக களமாடியவர், 2026 தேர்தலில் விஜய்யோடு நின்று அவருக்கு வலிமை சேர்த்து, தவெகவின் வெற்றிக்கு பாடுபட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எப்படிப் பார்த்தாலும், 2026ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் இருக்கும் என்பதை மட்டும் உணர முடிகிறது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.