"தவெகவுக்கு செல்வார்.. விசிகவுக்கு திரும்ப மாட்டார்"- ஆதவ்-ன் அடுத்த நகர்வு? - விளக்குகிறார் ஷ்யாம்!
‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு, அந்த நூலை வெளியிட்டிருந்தார். அந்த விழாவில், திமுகவுக்கு எதிராக விசிக துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா மிக காரசாரமாகப் பேசியிருந்தார். இது விசிக - திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்ப்புக் குரல்கள் எழுந்த நிலையில், ஆதவ் அர்ஜூனா விசிகவில் இருந்து 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து தன்னுடைய அறிக்கையை எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் ஆதவ் அர்ஜுனா, தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும்வரை தொடர்ந்து முழங்கிக்கொண்டு இருப்பேன் என்பதை பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக, 'ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை' என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்ய விரும்புகிறேன்.
இந்த மக்களுக்கான அதிகாரத்தைத் தட்டிப்பறிக்கும் அந்த மனநிலையை எதிர்காலத்தில் தேர்தல் பிரசாரத்தின் மூலம் உடைத்தெறிந்து, ஜனநாயக வழியில் அதைப் பெறும் போராட்டத்தில் பங்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவேன். கருத்தியல் வழியாகத் தோன்றும் தலைவர்களே மக்களுக்கான ஆட்சியாளர்களாக விளங்க முடியுமே தவிர, பிறப்பால் அல்ல என்ற கொள்கையில் உறுதியாகப் பயணிக்கிறேன்” என்று மீண்டும் தன்னுடைய கருத்தை ஆழமாக பதிந்திருக்கும் ஆதவ் அர்ஜுனா ’விடியல் நிச்சயம் உண்டு’ என்ற விசிக தலைவர் திருமாவளவனின் எழுத்துக்களையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.
விசிகவுக்கு திரும்ப போக மாட்டார்..
ஆதவ் அர்ஜுனா தன்னுடைய நிலைப்பாட்டை அறிக்கையாக வெளியிட்டிருக்கும் நிலையில், அவரின் அடுத்த நகர்வு எப்படி இருக்கும் என்பது குறித்து மூத்த பத்திரிக்கையாளரான ஷ்யாம் உடைத்து பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசியிருக்கும் ஷ்யாம், “6 மாதத்திற்கு இடைக்கால நீக்கம் என்பதை நான் இதுவரை பார்த்ததில்லை. ஒருவேளை ஆதவ் அர்ஜுனா தன்னுடைய போக்கை மாற்றிக்கொண்டு திரும்ப வருவார் என திருமாவளவன் நினைத்திருக்கலாம். ஆனால் ஆதவ் அர்ஜுனா மன்னர் பரம்பரை என விமர்சிக்கும் திமுக உடனான கூட்டணியில் இருக்கும் விசிகவுக்கு செல்ல மாட்டார். வேறு கட்சிக்கோ அல்லது விஜயின் தவெகவுக்கு வேண்டுமானால் செல்ல வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால் புதுகட்சி தான் தொடங்கவேண்டும்” என்று உடைத்து பேசினார்.
விசிக தொண்டர்களின் ஆதரவை எதிர்நோக்குகிறார்..
ஆதவ் அர்ஜுனாவின் பதிவு குறித்து பேசியிருக்கும் பத்திரிக்கையாளர் சுவாமிநாதன், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற தொண்டர்களின் குரலையே நான் பிரதிபலித்தேன் என்று விசிக தொண்டர்களின் ஆதரவை ஆதவ் அர்ஜுனா எதிர்நோக்குகிறார். மீண்டும் மன்னர் பரம்பரை என்ற நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல காலத்தின் கரங்களில் விடுவதாக அவர் தெரிவித்திருப்பது, தன்பக்கம் தொண்டர்கள் வருவார்களா என்ற எதிர்ப்பார்ப்புடன் அவர் இருப்பதை காட்டுகிறது. தொண்டர்களின் ஆதரவு கிடைக்கிறதா அல்லது கிடைக்கவில்லையா என்பதை பார்த்துவிட்டு வேறு கட்சிக்கு செல்லும் முடிவை சில காலம் அவர் தள்ளிவைத்துள்ளார்” என்று பேசியுள்ளார்.