விஜயகாந்த் pt web
தமிழ்நாடு

வீடு தேடி ரேஷன்.. ‘விஜயகாந்தின் தொலைநோக்கு திட்டம்’ கொண்டாடும் தேமுதிக நிர்வாகிகள்

தமிழக அரசு முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இது விஜயகாந்தின் கனவுத் திட்டம் என தேமுதிக ஆதரவாளர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இரா.செந்தில் கரிகாலன்

வீடு தேடிச்செல்லும் ரேசன் பொருட்கள்

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட பத்து மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், “நான் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும்” எனக்கூறிய விஜயகாந்தை நினைவுகூர்ந்து சிலாகித்து வருகின்றனர் தேமுதிக நிர்வாகிகள். நடப்பது என்ன? விரிவாகப் பார்ப்போம்..

ரேஷன் கடை

தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 34815 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. 2 கோடியே 26 லட்சத்துக்கு 57 ஆயிரத்து 997 ரேஷன் கார்டுகள் மூலமாக 7 கோடிப்பேர் பயனடைந்து வருகின்றனர். மாதந்தோறும் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டில் உள்ள உறுப்பினர்கள் கடைக்கு சென்று விற்பனை முனைய கருவியில் கைரேகையை பதிவு செய்தால்தான் பொருட்களை வாங்க முடியும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மட்டும் தங்களின் சார்பில் வேறு நபரை அனுப்பி பொருட்கள் வாங்கலாம். ஆனால், இதற்காக அவர்கள், மற்றவர்களின் உதவியை நாட வேண்டிய நிலை இருக்கிறது.

10 மாவட்டங்கள் திட்டம்

இந்நிலையில்தான், அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் வழங்கும் திட்டத்தை இந்த மாதம் முதல் தமிழக அரசு அமல்படுத்தியிருக்கிறது. முதற்கட்டமாக, சென்னை, திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தர்மபுரி, நாகை, நீலகிரி, கடலுார் ஆகிய மாவட்டங்களில் தொடங்கப்பட்டு உள்ளது. வேனில் ரேஷன் பொருட்கள், விற்பனை முனைய கருவி, விழிரேகை கருவியை எடுத்துச் சென்று, 'ஆதார்' சரிபார்க்கப்பட்டு மூத்த குடிமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் முதல், தமிழ்நாடு முழுவதுமுள்ள முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் தமிழகம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

விஜயகாந்த்

இந்தநேரத்தில், “எங்கள் கேப்டனின் லட்சியத் திட்டம் இது. அவர் சொன்னபோது பலரும் அவரைக் கேலி செய்தனர். ஆனால், தற்போது அது நடைமுறைக்கு வர இருக்கிறது. எது எப்படியோ எங்களுக்கு அது சந்தோசம்தான்” என சிலாகித்து வருகிறார்கள் தேமுதிக தொண்டர்களும் விஜயகாந்தின் ரசிகர்களும்.

கனவுத்திட்டம்

2005-ல் தேமுதிகவைத் தொடங்கிய விஜயகாந்த், வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களுக்காக பல்வேறு திட்டங்களை முன்வைத்தார். அதில், அவர் முன்வைத்த முக்கியமான திட்டம் என்பது ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்வது. ஆனால், அது அப்போது எதிர்க்கட்சிகளால் கேலிக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானது. 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேமுதிக தேர்தல் அறிக்கையில் இத்திட்டம் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது திருவண்ணாமலையில் ஒரு கூட்டத்தில் இதுகுறித்துப் பேசிய விஜயகாந்த், “நான் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும். இதெல்லாம் முடியுமா என்று சிலர் கேட்கிறார்கள். அப்படி கேட்பது முட்டாள்தனம். முடியும் என்பது அறிவாளிகளின் செயல். ஒரு முறை என்னை கோட்டைக்கு அனுப்பிவையுங்கள்” என சவால் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

“அரசியலுக்கு வந்து என்றில்லை., வருவதற்கு முன்பாகவே விஜயகாந்தின் கனவுத் திட்டமாக இது இருந்தது” என பத்திரிகையாளர் சிலரும் இதைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கின்றனர். இந்நிலையில், தற்போது தமிழக அரசு அமல்படுத்தியிருக்கும் திட்டத்தை கேப்டனின் கனவு நிறைவேறியது என கொண்டாடித் தீர்க்கின்றனர் அவரின் அபிமானிகள்.

தொலைநோக்கு பார்வைக்குக் கிடைத்த வெற்றி

இந்தநிலையில் இதுகுறித்து தேமுதிகவைச் சேர்ந்த மீசை ராஜேந்திரனிடம் பேசினோம். அவர் கூறியதாவது, “தமிழக அரசு முதியவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறது. இதை விஜயகாந்த் 2006 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலேயே தெரிவித்திருக்கிறார். இதை மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கிண்டல் செய்தார்கள். ஆனால், டெல்லியை ஆண்ட கெஜ்ரிவாலும், ஆந்திராவை ஆண்ட ஜெகன்மோகன் ரெட்டியும் வீடுதேடிச் சென்று ரேஷன் பொருட்களைக் கொடுத்தார்கள்.

meesai rajendran

வீடு தேடி எப்படி ரேஷன் பொருட்கள் செல்லுமென நானே கேப்டனிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு அவரோ, வீடு தேடி பேப்பர் வருகிறது, பால் வருகிறது.. அதுபோல் ரேசன் பொருட்களும் வரலாம். தமிழகம் முழுதும் இருக்கும் படிக்காத இளைஞர்களுக்கு வேலை கிடைக்குமல்லவா’ எனச் சொன்னார். 2006 ஆம் ஆண்டு தேமுதிக தேர்தல் அறிக்கையில் இருந்த பல விஷயங்களை ஆளும் அரசு அமல்படுத்துகிறது. எப்படியோ, விஜயகாந்தின் தொலை நோக்கு பார்வைக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.