விருதுநகர்: 5 ஆண்டுகளில் 110 பேர்.. உயிர்களைப் பறிக்கும் பட்டாசு ஆலை வெடிவிபத்துகள்
செய்தியாளர் மணிகண்டன்
பட்டாசுத் தொழிற்சாலைகள் நிறைந்த விருதுநகர் மாவட்டத்தில், 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளில், வெடிவிபத்துகளில் 110 தொழிலாளர்கள் மரித்துள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
வெடித்துச் சிதறும்போது உற்சாகத்தை பரிசளிக்கும் பட்டாசுகள், அவற்றைத் தயாரிக்கும் தொழிலாளர்களின் உயிரைப் பறிக்கும் சோகங்களும் நிகழ்வதுண்டு. இப்படியான சோகங்கள், சிவகாசி, சாத்தூர் பகுதிகளை தன்னகத்தே கொண்டுள்ள விருதுநகர் மாவட்டத்தில்தான் அதிகம் நிகழ்கின்றன.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட எஸ்.பி. அலுவலத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் சீமா அகர்வால் தலைமையிலான இந்தக் கூட்டத்தில், பட்டாசு வெடி விபத்துகளைத் தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், 2021ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையிலான பட்டாசு வெடி விபத்துகளில் நேரிட்ட உயிரிழப்புகள் குறித்த தரவுகள் வெளியிடப்பட்டன.
அதன்படி, இந்த ஐந்தாண்டுகளில் நேரிட்ட வெடிவிபத்துகளில் 110 தொழிலாளர்கள் மரித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக, 2024ஆம் ஆண்டில் மட்டும் 20 வெடி விபத்துகளில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதே 2024ஆம் ஆண்டில், வெடிவிபத்தில் சிக்கிய 50 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 5 வெடி விபத்துகள் நேரிட்டதாகவும், இதில் 11 பேர் உயிரிழந்ததாகவும் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. வெடி விபத்தில் இருந்து 31 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 2021ஆம் ஆண்டு முதல் நேரிட்ட வெடிவிபத்துகளில், 152 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். பட்டாசு ஆலை விபத்துகளில் தொழிலாளர்கள் உயிரிழக்கும் சோகங்கள், மேலும் நிகழாமல் இருக்க, பாதுகாப்பு நடைமுறைகளை ஆலை உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசிய இயக்குநர் சீமா அகர்வால், “இந்திய முழுவதுக்கும் சிவகாசியில் இருந்து பட்டாசு விற்பனை செய்யப்படுவது பெருமையாக உள்ளது. தரத்தின் மூலம் நமது ஊர் பெயர் வாங்க வேண்டும். விபத்தின் மூலம் அல்ல. விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்து ஏற்படுவதை பட்டாசு உற்பத்தியாளர்கள் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலங்களில் சிறிய வெடி விபத்து கூட நடக்க கூடாது.
சிவகாசியில் பட்டாசு ஆலைகள் சட்டவிரோதமாக குத்தகைக்கு விடப்படுவதால் உயிரிழப்பு அதிகமாக ஏற்படுகிறது. உயிரை பலி கொடுத்து பணம் சம்பாதிக்க வேண்டியது அவசியம் அற்றது. முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு உணர்வுடன் பட்டாசு உற்பத்தி தொழிலில் ஈடுபட்ட வேண்டும். பாதுகாபற்ற முறையில் பட்டாசு உற்பத்தி ஈடுபடுவதை தவிர்த்து பாதுகாப்புடன் உற்பத்தி பணியில் ஈடுபட வேண்டும்” என அறிவுறுத்தினார்.
முன்னதாக தீயணைப்பு துறையினரால் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு தீ விபத்து தடுப்பு குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.