ராமநாதபுரம்: குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு
ராமநாதபுரம்: குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு pt desk
தமிழ்நாடு

ராமநாதபுரம்: குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு

webteam

செய்தியாளர்: அ.ஆனந்தன்

ராமநாதபுரம் அருகே நயினார்கோவில் மருதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் - கீதா தம்பதியர். இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த நான்கு மாத்திற்கு முன்பு மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளதை அடுத்து கீதாவை குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள நயினார்கோவில் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் அழைத்ததாகக் கூறப்படுகிறது.

Protest

அதனை தொடர்ந்து நயினார்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கீதாவை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கீதாவை இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக உறவினர் கதறி அழுதனர்.

இதைத் தொடர்ந்து கீதாவின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டும் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டும் போராடினர். இதனால் ராமேஸ்வரம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Road blocked

இதையடுத்து போராட்டம் நடத்திய உறவினர்களுடன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் பரமக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சுமார் 4மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் போராட்டத்தில் ஈடுபட்ட கீதாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் உடலைப் பெற்றுக் கொண்டு கலைந்து சென்றனர். மேலும் உயிரிழந்த கீதாவின் குடும்பத்தினருக்கு 25 ஆயிரம் பணத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். கீதாவின் கணவர், அரசு வேலை கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஆட்சியர் உறுதியளித்திருக்கிறார்.