“எத்தனை கமிட்டி வேண்டுமானாலும் போடலாம்.. ஆனால்..” - மேகதாது குறித்து அமைச்சர் துரைமுருகன்

கர்நாடக அரசு எந்த கமிட்டி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி மேகதாது அணையை கட்ட முடியாது என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
துரைமுருகன், சித்தராமையா
துரைமுருகன், சித்தராமையாpt web

கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் நிதித்துறை அமைச்சரும் முதலமைச்சருமான சித்தராமையா, அம்மாநில நிதிநிலை அறிக்கை 2024-2025ஐ தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், “மேகதாது பகுதியில் அணைகள் கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு தனித்திட்டப்பிரிவும், இரு துணைப்பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மேகதாது அணை-சித்தராமையா
மேகதாது அணை-சித்தராமையாFile Image

மத்திய அரசு அனுமதி கொடுத்தால் உடனடியாக காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டப்படும். இத்திட்டத்தின் கீழ் மூழ்கும் நிலங்களைக் கண்டறியும் பணியும் அணைக்கட்டும் பகுதியில் உள்ள மரங்களை கணக்கெடுக்கும் பணிகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் பலவும் தங்களது கண்டனங்களை பதிவு செய்திருந்தன.

இந்நிலையில், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், “காவேரி ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் சொல்லாத மேகதாதுவை பற்றி பேசுவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. இதைத்தான் ஆதி முதல் நாங்கள் சொல்லிக் கொண்டு வருகிறோம்.

கடைசியாக நடந்த கூட்டத்தில் கூட, மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தை கொண்டு வந்த போது நாங்கள் எதிர்த்தோம் (தமிழகம்). மேகதாதுவில் அணை கட்டுவதை நாங்கள் மட்டுமல்ல கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்டோரும் எதிர்த்தோம். பின்னர் இது தேவையில்லை என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் அஜண்டாவை அனுப்புகிற போது இதையெல்லாம் மீறி மத்திய நீர் மேலாண்மை ஆணையத்துக்கு, கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என தவறாக மினிட் போட்டிருந்தார்கள். அதுதான் தவறு என நான் சபையிலேயே சொன்னேன். ஆக பேசி முடிவெடுத்தது ஒன்று, மினிட் போட்டது ஒன்று என்பதை நான் சுட்டிக் காட்டினேன். இது தவறானது என்பதை நாங்கள் உடனடியாக மத்திய நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தெரிவித்து விட்டோம். ஜல் சக்தி மந்திரிக்கும் தெரிவித்து விட்டோம்.

இன்றைக்கு அவர்கள் அதற்கு ஒரு கமிட்டி இதுக்கு ஒரு கமிட்டி போடுவதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை. காரணம் அவர்கள் போட்டுக் கொள்ளலாம், ஆனால் அவ்வளவு சுலபமாக அது வந்து விடாது. அணை கட்ட வேண்டும் என்று சொன்னால் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது. மேலும் DPR பாஸ் பண்ண முடியாது. மத்திய நீர் மேலாண்மை ஆணையத்திற்கும் அது போகாது.

கடந்த கூட்டத்தில் நாங்கள் எதிர்க்கவில்லை என்பது தவறு. நாங்கள் கூட்டத்திலேயே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறோமே. இதனால்தான் அவர்கள் கூறுவதையெல்லாம் நாங்கள் புறக்கணித்து விடுகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com