தமிழக அரசு மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிஸியேஷன் பவுண்டேசன் சார்பில் 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியம் திரையரங்கில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வை தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். 8 நாட்கள் நடக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 51 நாடுகளைச் சேர்ந்த 122 படங்கள் திரையிடப்பட உள்ளன. மேலும், நேற்றைய தொடக்க நிகழ்வில், நடிகை சிம்ரன், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் விதமாக சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அவரின் சூப்பர் ஹிட் படமான பாட்ஷா இன்று, திரையிடப்பட உள்ளது. தொடக்க விழாவின் முக்கிய நிகழ்வாக திரைத்துறையில் சாதனை படைத்த நடிகர் ரஜினிகாந்தை கவுரவிக்கும் விதமாக நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. அதை, ரஜினிகாந்தின் சார்பில் அவரின் மகள் ஐஸ்வர்யா பெற்றுக் கொண்டார். அப்போது பேசிய அவர், தந்தைக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரத்துக்கும், மரியாதைக்குக் நன்றி தெரிவித்துக் கொண்டார். ஒட்டுமொத்த உலகமே அப்பாவின் பிறந்தநாளை கொண்டாடுகிறது என் தந்தை சார்பாக, எங்கள் குடும்பம் சார்பாக உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
சென்னை திரைப்பட விழாவை தொடங்கி வைத்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், “தமிழ் சினிமாவின் சாதனை புரிந்த நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சென்னை கலைத்துறையின் தாய் வீடாக திகழ்கிறது. சென்னை சர்வதேச திரைப்பட விழாவை, தென்கிழக்கு ஆசியாவின் மிகச்சிறந்த விழாவாக மேம்படுத்துவதே எங்கள் இலக்கு. இந்த விழாவுக்கான நிதி இந்த ஆண்டு முதல் 95 லட்சமாக வழங்கப்பட உள்ளது. திரைப்படத்துறையினருக்கும் திராவிட இயக்கத்துக்குமான உறவை பிரிக்க முடியாது. திரைப்படத்துறையினருக்கு நலவாரியம் மூலம் அரசு நலத்திடங்கள் வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.