Karunanithi
KarunanithiPadayappa

"கலைஞர் வாக்குப் பொய்க்குமா? பலித்தது" - படையப்பா நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து

மூங்கில் குழாயில் அடைத்து மூடிப் புதைக்கப்பட்ட தேன் கால்நூற்றாண்டுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்படுகையில் வீரிய பானமாய் வெளிப்படுவது மாதிரி, காலம்கடந்தும் கலக்கவருகிறது படையப்பா.
Published on

ரஜினிகாந்த் கதை எழுதி, தயாரித்து, நடித்து கே எஸ் ரவிக்குமார் இயக்கிய படம் `படையப்பா'. இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கழித்து, ரஜினி பிறந்தநாளான இன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய அளவில் படத்துக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது. ரசிகர்கள் பலரும் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இன்று இப்படத்தின் ரீ ரிலீஸ் சூழலில், இப்படத்தின் பாடல்கள் அத்தனையும் எழுதிய வைரமுத்து, இப்படத்தின் நினைவை பகிர்ந்துள்ளார். அதில் இப்படத்தை பார்த்த அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி என்ன சொன்னார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் "இருபத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு பரபரப்புக் குறையாமல் வெளியாகிறது படையப்பா. மூங்கில் குழாயில் அடைத்து மூடிப் புதைக்கப்பட்ட தேன் கால்நூற்றாண்டுக்குப் பிறகு தோண்டி எடுக்கப்படுகையில்
வீரிய பானமாய் வெளிப்படுவது மாதிரி, காலம்கடந்தும் கலக்கவருகிறது படையப்பா. நான் வெறியெடுத்துப் பாட்டெழுதிய படங்களுள் படையப்பாவும் ஒன்று 'வெற்றிக்கொடிகட்டு' பாடல் எப்போது கேட்டாலும் என் அத்துணை நரம்புகளும் பாம்புகளாய்ப் படமெடுக்கும்.

Karunanithi
”இந்த துறையை கெடுத்ததில் முதல் ஆள் நீங்கள்தான்” - ஆர்.கே.செல்வமணி கேள்வியால் எழுந்த விவாதம்!

மறக்க முடியாத ஒரு நிகழ்வு சொல்கிறேன், படத்தின்முதல் பிரதி முதலமைச்சருக்குப் போட்டுக் காட்டப்படுகிறது விஜயராகவா சாலையில் தேவி ஸ்ரீதேவி குறுந்திரையரங்கில் திரையீடு நிகழ்கிறது அந்நாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர், மேலும் சில அமைச்சர்கள், ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிகுமார் நான் மற்றும் சிலர் படம் பார்க்கிறோம் படம் நிறைந்தது. கலைஞர் வெளியே வருகிறார்; யாரும் இல்லை தினத்தந்தி நிருபர் கங்காதரன் மட்டும் எப்படியோ துப்பறிந்து வந்துவிடுகிறார். “ஐயா!  படம் எப்படி இருக்கிறது” என்று ஒரு வினாவை வீசுகிறார். சற்றும் இடைவெளி இல்லாமல், “படையப்பா; பழைய சாதனைகளை உடையப்பா என்றிருக்கிறது” என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறுகிறார் கலைஞர். அவர் வாக்குப் பொய்க்குமா? பலித்தது. தன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ரஜினி வழங்கும் பாசப் பரிசு படையப்பா தங்கம் பழையதாகலாம்; விலை குறையுமா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com