2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி, திமுக அரசை வீழ்த்தும் வியூகத்தை இந்த பயணத்தில் வரையறுப்பார் என்று தெரிகிறது. செல்வாக்கான தலைவர், வலுவான கூட்டணி என்ற பலத்தில் இருக்கும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது சிரமம் என்றே பாஜக கருதுகிறது.
"திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், அதிமுக இரு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; முதலாவது, ஓ. பன்னீர்செல்வம், தினகரன் உள்ளிட்டோரை உள்ளணைத்து, கட்சியை வலுப்படுத்த வேண்டும். இரண்டாவது, திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளையேனும் இழுக்கும் வகையில், அவர்களுக்கு திமுக கொடுக்காத ஒரு வாய்ப்பை அதிமுக கொடுக்க வேண்டும். கூட்டணி ஆட்சி என்ற முடிவை அதிமுக எடுத்தால், இது நடக்கும்!” இதுவே அமித் ஷாவின் வியூகம்.
பிரதமர் மோடியும் இதையே விரும்புகிறார். இதைத்தான் வெவ்வேறு தருணங்களில், வெவ்வேறு வார்த்தைகளில் அதிமுகவுக்கு பொதுவெளியிலேயே சொல்லிக்கொண்டிருக்கிறது பாஜக. ஆனால், அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி இதை விரும்பவில்லை. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் தலைவர்களை இரு துருவங்களாக நிறுத்தி ஆடும் அரசியலாட்டமே ஜெயிக்கும். ஆகையால், ‘ஸ்டாலின் எதிர் பழனிசாமி’என்ற வியூகமே எடுபடும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சு அதிமுகவை பலவீனப்படுத்தும் என்று பழனிசாமி எண்ணுகிறார்.
அதேபோல, முன்பு கட்சிக்குள் மோடியின் அறிவுறுத்தலால் கொண்டுவரப்பட்டு பின்னர், குடைச்சலாக மாறிய பன்னீர்செல்வத்தை கட்சிக்குள்ளோ, கூட்டணிக்குள்ளோ மீண்டும் கொண்டுவருவதையும் அவர் விரும்பவில்லை. ஆக, இந்த விஷயம் அதிமுக – பாஜக கூட்டணியில் பெரும் விவாத பொருளாக உருவெடுத்துள்ளது. அதிமுகவும், பாஜகவும் மீண்டும் மீண்டும் இந்த விஷயங்களில் தத்தமது நிலைப்பாட்டை உறுதிபடுத்தியே பேசிவருகின்றன. இதனிடையே புதிய கட்சி தொடங்கி, விஜய் தலைமையிலான தவெக கூட்டணியில் இணையலாம் எனும் யோசனையை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்திவருகின்றனர் அவருடைய ஆதரவாளர்கள்.
பழனிசாமியுடனான சமரசத்துக்கு பாஜக உதவவில்லை என்றால், அடுத்தகட்டமாக அந்த முடிவை நோக்கி செல்ல தயாராகிவருகிறார் பன்னீர்செல்வம். ஒருவேளை அப்படி விஜயுடன் பன்னீர்செல்வம் கை கோத்தால், எம்ஜிஆர் ஓட்டு வங்கி பிளக்கும்; அதிமுகவிடமிருந்து கணிசமான வாக்குகள் அந்த கூட்டணி நோக்கி நகரும்; விளைவாக மூன்றாம் இடத்துக்கும்கூட அதிமுக – பாஜக கூட்டணி தள்ளப்படும் என்று எண்ணுகிறார் அமித் ஷா. ஆகையால், கடைசி கட்டம் வரை பன்னீர்செல்வத்தை தம் பக்கத்திலேயே வைத்திருக்க விரும்புகிறது பாஜக.
ஆனால், பன்னீர்செல்வமோ சீக்கிரமே ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இத்தகு சூழலில்தான் தமிழகம் வந்திருக்கிறார் பிரதமர் மோடி. பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவருமே மோடியை சந்திக்க நேரம் கேட்ட நிலையில், பழனிசாமியுடனான சந்திப்பை உறுதிசெய்திருந்தார் பிரதமரின் செயலர். திருச்சிக்கு வந்து பிரதமரை சந்திக்கும்படி பழனிசாமி தரப்புக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
இதேபோல, பழனிசாமியுடன் பேசிய பிறகு, பன்னீர்செல்வத்துடனான சந்திப்பு குறித்து முடிவெடுக்கலாம் என்ற எண்ணத்தில் பிரதமர் இருப்பதாகவும், வாய்ப்பிருந்தால் ஞாயிறு மாலை சந்திக்கலாம் என்றும் பன்னீர்செல்வம் தரப்புக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
மேலும், இரு தரப்பின் கோரிக்கைகளையும் கேட்டுக்கொள்வது தவிர்த்து, இப்போது விரிவாக பேச மோடி விரும்பவில்லை என்றும் விரைவில் இரு தரப்புகளையும் டெல்லிக்கு வரவழைத்து விரிவாக பேசுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து சமீபத்தில் விரிவான கணிப்பு அறிக்கை ஒன்றை உளவுத் துறை பிரதமர் மோடிக்கு தந்திருக்கிறது. அதேபோல, பாஜக சார்பில் அமர்த்தப்பட்ட தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வறிக்கையும் பிரதமர் கையில் உள்ளதாகத் தெரிகிறது. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் சில முடிவுகளுடனேயே தமிழகத்துக்கு வந்திருக்கிறார் மோடி. தமிழகத்துக்கான பாஜகவின் வியூகத்தை மோடி வகுக்கவிருக்கிறார். அந்த வியூகம் என்னவென்பதை அதிமுக, பாஜகவுக்குள் அடுத்தடுத்து நடக்கும் மாற்றங்களின் வழியாக காணலாம் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்!