அமைச்சர் வன்னி அரசு அமைச்சர் வன்னி அரசு
தமிழ்நாடு

"விலைவாசி குறைக்கப்பட வேண்டும்.. எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை" - அமைச்சர் வன்னி அரசு

பாஜக தலித் விரோத போக்கில்தான் இருக்கிறது என்பதற்கு எல்.முருகனின் 5 பக்க அறிக்கையே சான்று என்று அமைச்சர் வன்னி அரசு தெரிவித்திருக்கிறார்.

PT WEB

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பத்மஜா தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கலந்து கொண்டு சுமார் ரூ. 5.64 கோடி மதிப்பீட்டில் 1983 பயனாளிகளுக்கு அரசின் சார்பில் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதோடு ரூ. 3.64 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஏழு முடிவுற்ற திட்ட பணிகளையும் திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராக தான் பொறுப்பேற்ற நாள் முதல் மனைபட்டா இல்லாத மக்களுக்கு மனைபட்டா வழங்கப்பட்டு வருவதாகவும், இந்த ஓராண்டுக்குள் மனைப்பட்டா இல்லாதவர்களுக்கு விரைந்து மனைபட்டா வழங்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

வன்னி அரசு

மேலும் பேசிய அவர், "விலைவாசி குறைக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டிய முன்னெடுப்புகளை அரசு செயல்படுத்தி வருகிறது.

மின்வெட்டு இருந்தால் ஏன் மின்வெட்டு என கேட்கின்றார்கள்; மின்வெட்டை தீர்ப்பதற்கு மின்சாரத்தை கொள்முதல் செய்தாலும் ஏன் இவ்வளவு விலை என்று கேட்கின்றார்கள். அப்படி என்றால் என்னதான் செய்ய வேண்டும் என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். மின்சாரம் ஒரு யூனிட் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்வது குறித்து மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். அதுவே போதுமானதாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

தவெக கூட்டணியில் பாமக இணைய வாய்ப்பு இருப்பதாக எழுந்த கேள்விக்கு காலம் பதில் சொல்லும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறி இருப்பது குறித்து அமைச்சர் வன்னி அரசுவிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். எங்களது நிலைப்பாட்டை திண்டிவனத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நானும் எங்கள் கட்சியின் தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் என இருவரும் தெளிவுபடுத்தி விட்டோம். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு ஒரே நிலைப்பாடுதான். சாதியவாத பாமக, மதவாத பாஜக உடன் எப்போதும் எங்களுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதுதான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எல். முருகன்

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ராஜினாமா குறித்தும் அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது, "பாஜக தொடர்ந்து தலித் சமுதாயத்தினருக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தலித் சமுதாயத்தில் இருந்து மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றி வந்த எல்.முருகனை ஏன் ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்று பாஜக தெளிவுபடுத்த வேண்டும். இது ஒரு திட்டமிட்ட தலித் விரோத போக்காக தான் பார்க்கப்படுகிறது.

தனது ராஜினாமா குறித்து அண்ணன் எல்.முருகன் வெளியிட்டுள்ள ஐந்து பக்க அறிக்கையில் அவர் வலியுடன் பேசி இருப்பதை நான் பார்க்கிறேன். பாஜக தலைமை எப்படி ஒரு தலித் விரோத போக்கில் இருந்து வருகிறது என்பதற்கு எல்.முருகனின் ஐந்து பக்க அறிக்கையே ஒரு நல்ல உதாரணம்" எனத் தெரிவித்தார்.