பிரவீன் சக்கரவர்த்தி pt web
தமிழ்நாடு

பிரவீன் சக்கரவர்த்தி | மீண்டும் தமிழக அரசியல் அடிபடும் பெயர்.. யார் இவர்?

தவெக தலைவர் விஜயைச் சந்தித்துப் பேசியதை உறுதிபடுத்தியிருப்பதன் மூலம், பிரவீன் சக்கரவர்த்தியின் பெயர் மீண்டும் தமிழக அரசியல் களத்தில் அடிபட ஆரம்பித்துள்ளது. யார் இவர்? பார்ப்போம்!

PT WEB

அகில இந்திய காங்கிரஸின் அறிவுஜீவி முகங்களில் ஒருவராகவும், ராகுல் காந்தியின் நெருக்கமான வட்டத்தில் ஒருவராகவும் அறிமுகமானவர் பிரவீன் சக்கரவர்த்தி.

தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்; சென்னையில் பிறந்தவர் என்றாலும், தமிழ்நாட்டுக்கு வெளியிலேயே பிரவீன் சக்கரவர்த்தி உருவெடுத்தார். பிட்ஸ் பிலானியில் (BITS Pilani) பொறியியல் முடித்த இவர், தொடர்ந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் ஸ்கூலில் (Wharton School) எம்.பி.ஏ. பட்டம் பெற்றவர். ஐபிஎம், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிலும் பணியாற்றிய பிரவீன் சக்கரவத்தி, 2009இல் மன்மோகன் சிங் அரசின் விசேஷ திட்டங்களில் பங்கேற்றபோது கவனம் பெற்றார். பிரவீன் சக்கரவர்த்தியின் பொருளாதார அறிவும், தரவு அறிவியலில் அவருக்குள்ள நிபுணத்துவமும் காங்கிரஸின் கொள்கை வகுப்பாளர்களோடும் முன்னணி தலைவர்களோடும் நெருக்கத்தை உண்டாக்கியது. தொடர்ந்து, பிரவீன் சக்கரவர்த்தி 2017இல் ராகுல் காந்தியால் காங்கிரஸுக்குள் கொண்டுவரப்பட்டார். தற்போது காங்கிரஸின் தரவு பகுப்பாய்வுத் துறைக்கும், தொழில் வல்லுநர்கள் அணிக்கும் தலைமை வகிப்பதோடு, காங்கிரஸின் கொள்கை வகுப்பிலும், தேர்தல் வியூக வகுப்பிலும் பங்கெடுத்து வருகிறார்.

பிரவீன் சக்கரவர்த்தி நல்ல கட்டுரையாளரும்கூட. ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் உள்ளிட்ட பல பத்திரிகைகளிலும் எழுதிவருகிறார். திமுக மீது கசப்பு பார்வை கொண்டவர் பிரவீன் சக்கரவர்த்தி என்று சொல்லப்படுவது உண்டு. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் திமுக தலைமைக்கும் இடையே பிணக்கு ஏற்பட பின்புலத்தில் இருந்தவர் என்ற பேச்சும் உண்டு. அதேபோல, நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிட விரும்பிய பிரவீன் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்க திமுக விரும்பவில்லை என்றும் ஒரு பேச்சு உண்டு. ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்ற குரல்களில் பிரவீன் சக்கரவர்த்தியும் ஒன்று.

இத்தகு சூழலில், தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று காங்கிரஸுக்குள் ஒரு தரப்பு முயன்றுவருவதாக சமீப காலமாகவே பேச்சுகள் இருந்துவந்தன. திமுக தலைமை இதையறிந்து அதிருப்தி அடைந்ததாகவும், இரண்டில் ஒரு முடிவை எடுக்கும்படி காங்கிரஸுக்கு செய்தி அனுப்பியதாகவும்கூட பேச்சுகள் அடிபட்டன. இதையடுத்தே, திமுக தலைமையை சமாதானப்படுத்தும் வகையில், கூட்டணி விஷயத்தை உறுதிசெய்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி அளித்தனர். தவிர, திமுகவுடன் தொகுதி உடன்பாடு பேச்சு நடத்தவும் காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கப்பட்டது. தவெகவுடன் நெருக்கம் காட்டுவதன் மூலம் திமுகவிடம் அதிகமான தொகுதிகளை கேட்டுப் பெற காங்கிரஸ் திட்டமிடுகிறதா எனும் கேள்வியும்கூட எழுந்தது.

இத்தகு பின்னணியில்தான் விஜயுடன் பேசியதாகக் கூறியிருக்கிறார் பிரவீன் சக்கரவர்த்தி. கூட்டணி தொடர்பாக பேசினேன் என்று அவர் சொல்லாவிட்டாலும்கூட, திரைமறைவில் தவெகவுடன் காங்கிரஸ் பேசிக்கொண்டிருப்பதை பிரவீன் சக்கரவர்த்தியின் சந்திப்பு உறுதிபடுத்துகிறது என்பதே உண்மை!