கைதான காவலர்கள் சுந்தர், சுரேஷ்ராஜ் pt web
தமிழ்நாடு

"தமிழகத்தின் மீதான அழியா களங்கம்" - ஆந்திர பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. அரசியல் கட்சிகள் எதிர்வினை

திருவண்ணாமலையில், ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இரண்டு காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வேலியே பயிரை மேயும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

PT WEB

திருவண்ணாமலையில், ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான இரண்டு காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வேலியே பயிரை மேயும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வழிபடுகின்றனர். அப்படி, அண்ணாமலையாரை தரிசிப்பதற்காக ஆந்திராவில் இருந்து 25 வயது இளம்பெண் தனது வளர்ப்பு தாயுடன் திருவண்ணாமலை நோக்கி வந்துள்ளார்.

வாழைத்தார் ஏற்றி வந்த சிறியரக சரக்கு வாகனத்தில் அவர்கள் பயணித்த நிலையில், ஏந்தல் புறவழிச்சாலை அருகே 29ஆம் தேதி நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகியோர் சரக்கு வாகனத்தை இடைமறித்துள்ளனர். பின்னர் இளம்பெண் மற்றும் அவரது வளர்ப்பு தாயை மிரட்டி கீழே இறங்க சொல்லி, தங்களது இருசக்கர வாகனங்களில் அழைத்து சென்றுள்ளனர். சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்றபிறகு வளர்ப்பு தாயை பள்ளத்தில் தள்ளிவிட்டு, இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தையே அதிரச் செய்த இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட காவலர்கள் இருவரையும் தனி இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு, பின்னர் கைது செய்தனர். தொடர்ந்து, இரண்டு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பிறப்பித்துள்ளார். சம்பந்தப்பட்ட இரு காவலர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளும் தொடங்கி இருப்பதாக சுதாகர் தெரிவித்துள்ளார்.

கைதான காவலர்கள் சுந்தர், சுரேஷ்ராஜ்

அதேவேளையில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். வேலியே பயிரை மேய்ந்த கதையாக நடந்துள்ள இச்சம்பவம் தமிழகத்தின் மீதான அழியா களங்கம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழினத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள இச்கொடுஞ்செயலை ஒருபோதும் மன்னிக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்திருப்பதுதான் திராவிட மாடல் அரசின் சாதனை என பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் ஆந்திர பெண்ணிற்கு நடந்த கொடுமை தொடர்பாக பேசிய மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு மற்றும் கவுன்சிலிங் வழங்கப்படும் என்றும், 10 நாட்களுக்குள் அரசின் சார்பில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.