குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக் கு விரைந்து நீதி கிடைப்பதற்கும் கொண்டுவரப்பட்டது போக்சோ சட்டம்... ஆனால், அந்தச் சட்டம் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் வழக்குகளை முடிக்க முடியாத நிலை நீடிக்கிறது. இதற்கான காரணங்களையும், பாதிக்கப்பட்ட சிறார் மன உளைச்சலுக்கு ஆளாவது குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் நிலுவையில் இருக்கும் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, 18 ஆயிரத்து 518 போக்சோ வழக்குகள் விசாரணைக்காக நிலுவையில் இருக்கின்றன. இதில் 12 ஆயிரத்து 983 வழக்குகளில் மட்டுமே 60 நாட்களுக்குள் காவல்துறை இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 4 ஆயிரத்து 729 வழக்குகளில் காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்தும், நீதிமன்றத்தில் வழக்குகள் எடுத்துக்கொள்ளப்படாமல் நிலுவையில் உள்ளன.
தடயவியல் மற்றும் டிஎன்ஏ பரிசோதனை அறிக்கைகள் கிடைப்பதில் தாமதம், நீதிமன்றங்களில் வாக்குமூலம் பதிவு செய்வதற்கான தேதிகளைப் பெறுவதில் சிக்கல், நீதிபதிகள் காலிப் பணியிடங்கள், போதிய பிரத்யேக நீதிமன்றங்கள் இல்லாமை உள்ளிட்டவை தாமதங்களுக்கான முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. மேலும், காவல்துறை, நீதிமன்றங்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றக் குறைபாடுகளும் வழக்கு நடவடிக்கைகளைத் தாமதப்படுத்துவதாக வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள்.
போக்சோ சட்டப்படி, வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சாட்சியம் 30 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். வழக்கை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும். ஆனால் இது ஏட்டளவிலேயே இருக்கிறது. நீதிமன்ற அறிக்கையின்படி 18 ஆயிரத்து 870 வழக்குகளில் வெறும் 3 ஆயிரத்து 170 வழக்குகளில் மட்டுமே இந்தக் காலக்கெடுவுக்குள் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது 16.7 சதவீதம் மட்டுமே. விசாரணைக்காக மீண்டும் மீண்டும் அழைக்கப்படுவதால், ஏற்கனவே பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல்வேறு மன நல பாதிப்புகளுக்கு உள்ளாவதாகக் கூறுகிறார் குழந்தைகள் மனோதத்துவ நிபுணர் முனைவர் ராணி சக்கரவர்த்தி.
பெண்கள், குழந்தைகள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்கும் நோக்கில், தமிழகத்தில் மேலும் 26 போக்சோ நீதிமன்றங்களை, 46 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் அமைக்க முதல்வர் விஜய் ஆணையிட்டுள்ளார். என்றாலும் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே இந்தப் பிரச்சனைக்கான முழுமையான தீர்வாகிவிடாது. நீதிமன்றங்களில் நீதிபதி உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புதல், தடயவியல் அறிக்கைகளை விரைந்து பெறுதல், காவல்துறை மற்றும் நீதிமன்றங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், பாதிக்கப்பட்ட குழந்தைகளை மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துதல் உள்ளிட்டவற்றை செயல்படுத்த வேண்டும். ஆகவே போக்சோ வழக்குகளில், தாமதமின்றி, பாதுகாப்பான சூழலில் நீதி கிடைக்கச் செய்வதை உறுதி செய்வது மிக மிக அவசியம்.