ஒரு மருந்து விற்பனைப் பிரதிநிதியின் டைரிக்குறிப்பு 15 | நல்லவற்றிற்குக் காலம் இருக்கிறதா?
உயிரும் அரைநாளும்
இரண்டு வாரங்களுக்கு முன் நண்பரான மருத்துவர், அவர் இருக்கும் கிராமத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வைப் பகிர்ந்து, அதன் மூலம் தன் ஆதங்கத்தைக் கொட்டிக்கொண்டிருந்தார்.
முதல் நாள் இரவு ஓர் அறுவைச்சிகிச்சை முடிந்து நோயாளியைத் தொடர் கவனிப்பில் ( OBSERVATION) வைத்திருந்து இரவு வீட்டிற்கு வந்ததே நடுநிசி 2 மணியாகிவிட்டதாம்.
பொதுவாக இரவு மிகவும் தாமதமாகப் படுத்தால் கூடுதலாகக் கொஞ்சம் தூங்கிவிட ஆசைப்படுவது மனித இயல்பு தானே. அப்படித்தான் அந்த மருத்துவரும் எண்ணியிருக்கிறார். ஆனால் , காலை 8 மணிக்கெல்லாம் மருத்துவமனையிலிருந்து அழைத்திருக்கிறார்கள். திடீரென்று நெஞ்சுவலி , படபடப்பு என்று இன்னொரு நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். செவிலியர்கள் மற்றும் அந்நேர டூட்டி மருத்துவர் மூலமாகப் பரிசோதிக்கச் சொல்லிவிட்டு மருத்துவரும் எழுந்து காலை 8.50 மணிக்கெல்லாம் மருத்துவமனை வந்தடைகிறார். தாறுமாறான இதயத்துடிப்பு எந்நேரமும் மாரடைப்பு வரலாம் என்ற அறிகுறிகள் தெரிய உறவினர்களை அழைத்து அவர்களிடம் ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் இருப்பதால் உறவினர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே 'ஹார்ட் அட்டாக்' நிகழ்கிறது.
இரத்த உறைவு கரைத்தல் சிகிச்சை
நேரம் மிகக் குறைவு. 'இரத்த உறைவு கரைத்தல் சிகிச்சை' என்று கூகுளில் போட்டால் THROMBOLYSIS என்று வரும் , 9.25க்கு அதைச் செய்து எந்த நேரத்திலும் நோயாளி சரிந்துவிழும் அபாயம் இருப்பதால், அப்படி எதுவும் நிகழ்ந்தால் நோயாளியின் உயிரைக் காப்பாற்றச் செயற்கை சுவாசத்திற்குத் தயாராக இருக்க வேண்டி செவிலியர்களைப் பணித்து, நோயாளியின் அருகிலேயே இருந்திருக்கிறார். 9.40க்கு நோயாளி சரிய ஆரம்பிக்கிறார்.
சினிமா படங்களில் போல CPR
சினிமா படங்களில் காண்பிப்பதைப் போல நாம் உருவகித்துக்கொள்ள வேண்டும், CPR சிகிச்சை, 'மின் அதிர்வு சிகிச்சை' அளித்து இதயத்துடிப்பைச் சீராக்கி ஆக்ஸிஜன், இரத்த அழுத்தம் ஆகியவற்றை இயல்பாக்கி செயற்கை சுவாச வசதியுடைய ஆம்புலன்ஸை வரவழைத்து அந்தக் கிராமத்திலிருந்து ஒரு மணி நேர தூரத்திலிருக்கும் நகரத்தின் பெரிய மருத்துவமனைக்கு அனுப்பிய போது மணி 10.10 அத்தோடு முடிந்துவிடவில்லை. ஒரு நோயாளி வருகிறார், மாரடைப்பு நேரிடுகிறது, முதலுதவி செய்து தன் இடத்தை விட்டு வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டால் வேலை முடிந்துவிடும் என்பது பொது புத்தி. ஆனால், நிறைய மருத்துவர்கள் அப்படிவிடுவதில்லை. இந்த மருத்துவரும் அலைபேசி வாயிலாக நோயாளி சென்று கொண்டிருக்கும் மருத்துவமனையைத் தொடர்புகொண்டு வந்து கொண்டிருக்கும் நோயாளியின் நிலைமையைச் சொல்லி அவர் வந்ததும் அவருக்குக் கிடைக்கும் சிகிச்சைகளுக்கான முன்னேற்பாடுகளை செய்துள்ளார்.
பணமா? உயிரா?
இரவு அறுவைச் சிகிச்சை முடிந்து நோயாளியை 'நார்மல் வார்டுக்கு அனுப்பிய பிறகுதான் வீட்டிற்குத் தூங்கச் சென்ற மருத்துவர், மறுநாள் காலை 8.50 லிருந்து 10.10க்குள் ஒரு நோயாளியைக் காப்பாற்ற போராடி கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்புவரை சென்றவரை இழுத்து இந்தப் பூமியில் இன்னும் வாழவேண்டும் என்று உயிர் போவதற்கான அபாயத்திலிருந்துக் காப்பாற்றி, அருகில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி ஆஞ்சியோமூலம் நோயாளி காப்பாற்றப்பட்ட வரை மருத்துவரின் மனதிற்குள் பணம் ஓடியிருக்குமா? அல்லது ஓர் உயிர் காப்பாற்றப்படவேண்டும் என்ற எண்ணம் ஓடியிருக்குமா ?
இந்த நிகழ்வைப் பிரித்துப் பார்த்தால், பணத்திற்காக உழைக்கிறார்கள், அது அவர்களது கடமை, அதற்காகத்தானே படிக்கிறார்கள் என்று ஒரு பார்வையை முன் வைக்கலாம்.
நோயாளி வந்திருந்த நேரம் காலை 8.55. அந்த நேரம் மருத்துவர் இருந்தது வீட்டில், வேலை நேரம் 10 மணிக்கு என்றாலும் விரைந்து வர வேண்டிய அவசியம் பணத்தின் அவசியத்தைத் தாண்டி ஓர் உயிர் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் தான் முக்கியமான கருதுகோளாக இருந்திருக்கிறது.
3 மணி நேரத்தில் ஒரு மருத்துவருக்கு எவ்வளவு பணம் தருவீர்கள்? அந்தப் பணத்திற்காக ஒருவன் தூக்கத்தைவிடுத்து எதற்காக ஓடி வரவேண்டும் போன்ற கேள்விகளையும் நாம் ஆராயவேண்டும்.
கிட்டத்தட்ட ஓர் உயிரின் சுமையை அரை நாளாக மனதில் சுமந்துகொண்டுதான் ஒரு மருத்துவர் இருந்திருக்கிறார். இதை அந்த நோயாளியோ, அல்லது அந்த நோயாளியின் உறவினர்களோ அறிந்திருக்க மாட்டார்கள்.
திரைக்கு முன் , திரைக்குப் பின் என்று சினிமாவில் சொல்வார்கள் அல்லவா, அப்படி, திரைக்குப் பின் இந்த மருத்துவர் அந்த நோயாளியை அனுப்பி விட்டு அந்த மருத்துவமனையின் சிறப்பு மருத்துவரிடம் நோயாளியின் நிலைமையை முதலில் விளக்கி, பிறகு அவர்களது சிகிச்சையைக் கேட்டுத் தெரிந்துகொள்வது வரை நோயாளி உட்பட யாருக்கும் தெரியாது. இதுவும் உழைப்பு தான்.
அறிவுசார் உழைப்பிற்கு மதிப்பும், மதிப்பீடும்
எனக்குத் தெரிந்து உடல் சார் உழைப்பு, அறிவு சார் உழைப்பு என்று உழைப்பின் வகைமையை இரண்டாகப் பிரித்தால் அறிவு சார் உழைப்பிற்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் குறிப்பாக இரண்டாம் உலகப்போருக்குப் பின் நடந்த உலகமயமாக்கலினால், பெரியளவில் மதிப்பும் மதிப்பீடும் இருந்ததாகத் தெரிகிறது. விஞ்ஞானிகளும், மருத்துவர்களும், பொறியியல் வல்லுனர்களும் பல மகத்தான சாதனைகளை அறிவுசார் உழைப்பாக வெளிப்படுத்தி அதற்கான மதிப்புகளையும் மதிப்பீடுகளையும் பெற்றிருந்தனர். இன்றைய காலகட்டத்தில் அப்படியானப் பெருமிதமும் மதிப்பும் அந்தளவிற்கு இல்லை என்றே தோன்றுகிறது.
கொஞ்சம் தகவல் தொழில் நுட்ப துறையில் அறிவு சார் உழைப்பிற்கு ஏற்ற மதிப்பும் மதிப்பீடும் ( பொருளாதார நோக்கில்) இருப்பதாகப்படுகிறது. ஆனால், மருத்துவர்களுக்கான அறிவு சார் உழைப்பிற்கான மதிப்பும் மதிப்பீடும் கடந்த பத்தாண்டுகளில் இருந்தது போல் இந்தப் பத்தாண்டுகளில் இல்லை என்பது மட்டும் நிச்சயம். பலவிதமானக் காரணங்களைச் சொல்லலாம். என் உழைப்பிற்கான மதிப்பும், மதிப்பீடும் இது தான் என்று யார் யாரால் கூறமுடியும்?
மதிப்பு என்றால் என்ன?
என்னிடம் ஒரு பைக் இருக்கிறது , அதை விற்க வேண்டும். அதன் இறுதி விலை ஒரு லட்சம் ரூபாய் என்று குறித்து வைத்திருக்கிறேன். அதாவது பைக்கின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்.
மதிப்பீடு என்றால் என்ன?
அதே வண்டியை ஒரு மெக்கானிக் வந்து, வண்டி எத்தனைக் கிலோமீட்டர் ஓடியிருக்கிறது, என் ஜீன் எப்படி இருக்கிறது என்று சோதித்து ஆதாரங்களுடன் ஒரு விலை நிர்ணயிப்பார் என்றால், அது மதிப்பீடு.
மதிப்பும் மதிப்பீடும் ஒரே நேர்கோட்டில் இருக்கிறதா என்பது தான் கேள்வி.
விருமாண்டி பாணி
விருமாண்டி படத்தில் இயக்குனராக கமல்ஹாசன் திரைக்கதை சொல்லும் பாணி போல் மேற்சொன்ன சம்பவத்திற்கு வருவோம். மருத்துவரின் பார்வையில் நடந்ததைப் பார்த்தோம். நோயாளியின் பார்வைக்கு வருவோம்.
உதாரணத்திற்கு நான் தான் அந்த மருத்துவமனை செல்கிறேன். தலைசுற்றல், படபடப்பு, மயக்கம் தான் அறிகுறிகள். டூட்டி டாக்டர் வருகிறார், சோதிக்கிறார், இரத்தம் அழுத்தம் கூடியிருக்கிறது, தொலைபேசியில் அழைத்து முதன்மை மருத்துவருக்கு விசயத்தைச் சொல்கிறார், சிறிது நேரத்தில் ஈ சி ஜி எடுக்கிறார்கள், அதற்குள் முதன்மை மருத்துவர் வருகிறார். என்னை அவசரப் பிரிவு படுக்கையில் கிடத்துகிறார்கள். எனக்குக் கண்கள் இருண்டு கொண்டு வருகின்றன. கைகள் நடுங்குகின்றன. பெரிய பாறாங்கல்லை மார்பில் வைத்தது போல் உணர்வு மேலெழுகிறது. ஏதோ அழுத்திக்கொண்டே இருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது , ஆனால் சொல்ல முடியவில்லை, பெரிய இளைப்பாக மூச்சு விடத் தோன்றுகிறது, ஆனால் என்னால் மூச்சு விட முடியவில்லை என்பதைக் கூட என்னால் உணர முடியவில்லை.
கண்களை மூடி மூடித் திறக்கிறேன், அவசரநிலைக் கருதி செவிலியர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு ஏதேதோ வயர்களை என் மார்பிலும் கை கால்களிலும் சொருகுகிறார்கள், பின் பக்கத்தில் இருந்து ஏதோ பீ ப் பீப் சத்தம் எல்லாம் கேட்கிறது. கைகளைத் தூக்கி என் மார்பில் வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். முதன்மை மருத்துவர் வருகிறார் , சில கேள்விகள் கேட்கிறார், பதிலைச் சொல்கிறேன்.
எல்லாவற்றிற்கும் நானே சாட்சி
என்ன சாப்பாடு சாப்பிட்டேன், இதற்கு முன் இப்படி வந்திருக்கிறதா, வேறு ஏதேனும் மருந்து உட்கொள்கிறேனா போன்ற கேள்விகளைக் கேட்கிறார், அவர் அவரது கேள்விகளின் மூலம், நான் சுய நினைவில் தான் இருக்கிறேனா என்று சோதிக்கிறாரோ என்ற யோசனையும் எனக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. முதன்மை மருத்துவர் இப்போது என்ன பேசுகிறார் என்பதை என்னால் அறியமுடியாதளவு நான் சரிய ஆரம்பிக்க, அருகிலேயே நிற்கும் அவர், ஏதோ ஊசிகளை என்னில் செலுத்துகிறார். என் உறவினரை அழைத்து மின் அதிர்வு சிகிச்சை என்றேல்லாம் கூறிக்கொண்டிருப்பது மட்டும் என் காதுகளில் விழுகின்றன.
மெல்ல என் மார்பின் பாரம் குறைகிறது. என் வியர்வை எனக்குக் குளிர்கிறது, உடல் சூடு வெப்பமயமாதலின் நடுவே குளிர்ந்து மிதமான இயல்பானச் சூட்டிற்கு வருகிறது. மருத்துவர் என் நெற்றியில் கை வைத்துப் பார்த்து, ஹார்ட் அட்டாக், பயப்பட வேண்டாம், வேற ஆஸ்பத்திரிக்கு அனுப்புறோம், அங்க போய்ட்டு சில ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு மறுபடியும் என்னைய பாருங்க " என்று நம்பிக்கையாய் ஆம்புலன்ஸ்க்கு வழியனுப்புகிறார்". எனக்கு நடந்த சிகிச்சைக்கும், நான்கு மணி நேரத்தில் நான் மரணம் வரைச் சென்றதற்கும், மீண்டு வந்ததற்கும் நானே சாட்சி.
ஒரு நோயாளியாக ஆம்புலன்சில் அடுத்த கட்ட சிகிச்சைக்காக நான் சென்ற பிறகும் என்னைக் காப்பாற்ற சில முஸ்தீபுகளை மருத்துவர் தயார் செய்திருக்கிறார் என்று தெரிந்துகொண்டேன்.
ஒரு வாரம் கழித்து நான் சிகிச்சை எல்லாம் முடித்து பழைய மருத்துவமனைக்குச் சென்று என் அருகிலேயே நின்று முதலுதவி தந்த மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று வீட்டில் கூறிய போது தான் தெரிந்துகொண்டேன், நான் அங்கிருந்து வேறொரு மருத்துவமனைக்குக் கிளம்பிய பிறகு என் உறவினர்கள், அந்த மருத்துவரிடம் , " ஏன் அவரால் காப்பாற்றமுடியவில்லை என்றும், வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டேன் என்றும், இப்படி அனுப்பினால், அவருக்கு எதுவும் கமிஷன் வருகிறதா என்றும் கேட்டு வாக்குவாதம் செய்ததாக அறிந்துகொண்டேன்."
ஒரு சம்பவத்தின் இரு பக்கங்களையும், இரு ஜோடி கண்களின் வாயிலாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறேன்.
கடைசியாக அந்த மருத்துவர் என்னிடம் புலம்பியதை இங்குப் பகிர ஆசைப்படுகிறேன். " இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு, இப்படிப் பேச்சு வாங்கனுமா? எனக்கு இதுலாம் தேவையானு வருது"
உங்களின் மதிப்பை வேறொரு அளவையால் குறைத்து மதிப்பீடு செய்யும்பொழுது நீங்கள் விரக்தியின் எல்லைக்குத்தான் தள்ளப்படுவீர்கள்.
உடல்சார் உழைப்போ, அறிவுசார் உழைப்போ, எந்த உழைப்பைச் சுரண்டினாலும் அது சுரண்டல் தானே!
ஹாட்ஜ் அவர்களது சொற்றொடரை ஞாபகப்படுத்துகிறேன், விரக்தி மனப்பான்மையிலிருந்து வெளிவரவேண்டுமானால் நமக்கு வரும் தடைகளை உதறிவிட்டு நம் செயல்களின் விளைவுகளை மட்டுமே கவனிக்க வேண்டும்.
தொடரும்..

