தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆளும் திமுக மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் நோக்கில் 26 கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்திருக்கிறது. அதேபோல, எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜக, அமமுக கட்சிகள் உள்ளிட்ட 14 கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தொடர் பரப்புரைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ச்சியான பிரதமர் மோடியின் பொதுக்கூட்டங்களும் அக்கூட்டணிக்கு பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில்தான், செங்கல்பட்டு மற்றும் மதுரை பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து மூன்றாவதாக, பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. 30 ஏக்கர் பரப்பளவில் மேடை மற்றும் பொதுக்கூட்டத் திடல் அமைக்கப்பட்டிருந்த நிலையில், என்.டி.ஏ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்று இருந்தனர். இதில், கலந்துகொள்வதற்காக இன்று மாலை கேரளாவில் இருந்து திருச்சி வந்த பிரதமர் மோடி, முதலாவதாக பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் பங்கேற்றார். அங்கு, ரூ. 5,655 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அதற்கு முன்னதாக, டி.டி.வி தினகரன், அன்புமணி ராமதாஸ் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், ”அனைவருக்கும் வணக்கம்” எனக் கூறி அவரது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், ” திருச்சியில் உங்கள் முன் நான் இருப்பதை பெருமிதமாக உணர்கிறேன். நெஞ்சுரம் மற்றும் நம்பிக்கை மிகுந்த நகரம் திருச்சி. கார்க்கில் போரில் தியாகம் செய்த மேஜர் சரவணன் திருச்சியைச் சேர்ந்தவர். தமிழ்மக்களோடு இணைப்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் ஆர்வத்தைக் காட்டுவது வழக்கம். தமிழகத்தின் நாடித் துடிப்பை என்னால் தெளிவாக கணிக்க முடிகிறது. ஆடி மாதத்தில் காவிரி தீவிரமாக ஓடுவதுபோல, இந்தத் தேர்தல் காலத்தில் மாற்றத்திற்கான ஆசை வேகமாக பயணிக்கிறது. ஆட்சியில் இருந்து திமுகவை தூக்கியெறிய மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். ஒரு குடும்பத்துக்காக மட்டுமல்லாமல், மாநிலத்தின் அனைத்துக் குடும்பங்களுக்கும் செயல்படும் அரசையே மக்கள் விரும்புகிறார்கள். என்.டி.ஏ கூட்டணியால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பாக மதுரை சென்றேன். அங்கு, 4 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டது. இன்று திருச்சியில், ரூ. 5,655 கோடி மதிப்பிலான திட்டங்கள் துவங்கி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக நாங்கள் மிகப்பெரிய முதலீடுகளை செய்து வருகிறோம். இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். திருச்சியில் புதிய விமான முனையம் ஒன்றை அமைத்தோம். தற்போது, நமது அரசாங்கம் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியிருக்கிறோம். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைவது அவசியம். 2014ஆம் ஆண்டு தொடங்கி, 3 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு நிதிப்பகிர்வு வழங்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தைவிட 4 மடங்கு கூடுதல் நிதி இது.
2021ஆம் ஆண்டில் தமிழக மக்கள் திமுகவை ஆட்சிக்கு வரவைத்தார்கள். அந்த ஆட்சியில், அனைத்தும் ஒரு குடும்பத்தில் இருந்து தொடங்கி ஒரு குடும்பத்திலேயே முடிந்துவிடுகிறது. அமைச்சர்கள் மாறினாலும் அதிகாரம் ஒரு குடும்பத்திடம் மட்டுமே இருக்கும். இதே மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றிருக்கிறார். ஆறெல்லாம் எப்படி கடலில் போய்ச் சேருகிறதோ; அதுபோல, இந்த பணமெல்லாம் திமுகவிடம் போய்ச் சேருகிறது. அது குடும்பத்தின் சொத்தாகிறது. மத்திய அரசுக்கு பாராட்டு கிடைக்கும் என்பதற்காக மத்திய அரசின் இலவச வீடு திட்டத்தை திமுக அரசு நடைமுறைபடுத்தத் தயங்குகிறது.
’நெல் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும்’ என கூறிய ’திமுகவின் வாக்குறுதிகள் என்னவாயின’ என மக்கள் கேட்கிறார்கள். மக்கள் நலனைவிட அரசியல் நலனே திமுகவுக்கு முக்கியம். அதேபோல, தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகிவிட்டன. ஆனால், நான் உங்களிடத்தில் வாக்களிக்கிறேன்; தமிழ்நாட்டில் பெண்கள் அச்சமில்லாமல் வாழ்வதை என்.டி.ஏ உறுதி செய்யும். குற்றவாளிகள்தான் அச்சத்தோடு வாழ்வார்களேதவிர, மக்கள் அல்ல.
தமிழ்நாட்டின் வரலாற்றில் வரும் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது. மக்களின் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது. நாம் அனைவரும் வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு மாற்றத்தை விரும்புகிறது. தமிழ்நாடு என்.டி.ஏ-வை விரும்புகிறது” எனத் தெரிவித்து தனது உரையை முடித்துகொண்டார்.