திருவள்ளூரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆந்திர மாநிலம் குளூர்பேட்டையில் வடமாநில இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபரின் புகைப்படத்தை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் காண்பிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
கடந்த 13 நாட்களாக தேடப்பட்டுவந்த குற்றவாளி கிடைத்துவிட்டார் என்ற தகவல் ஆரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீ போல் பரவியதையடுத்து, சிறுமியின் உறவினர்களும் பொது மக்களும் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். கைதான நபரை தங்களுக்கு காட்ட வேண்டும் என வாக்குவாதம் செய்தனர்.
பின்னர், சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினரின் தடுப்புகளை வைத்து ஆந்திராவில் இருந்து செல்லும் வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அவர்களை போலீசார் அமைதிபடுத்தி அங்கிருந்து தற்போது அப்புறப்படுத்தி வருகின்றனர்.