ரயில் விபத்து முகநூல்
தமிழ்நாடு

தமிழ்நாடு | ரயில் பயணத்தில் 5 ஆண்டுகளில் 131 பேர் உயிரிழப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்!

இது தொடர்பாக நமது செய்தியாளர் மருதுபாண்டி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் திருச்சி காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தார்.

மருதுபாண்டி.நா

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரயில் பயணத்தின் போது 131 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் உடைமைகளை இழந்தோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டி நிற்கிறது.

2020 முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற தற்கொலைகள், பயணத்தின் போது உயிரிழப்பு, தவறி விழுந்து உயிரிழத்தல், ரயில் பெட்டிகளில் நடைபெற்ற திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அறிய முற்பட்டது புதியதலைமுறை. இது தொடர்பாக நமது செய்தியாளர் மருதுபாண்டி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் திருச்சி காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்திருந்தார்.

திருச்சி மற்றும் மதுரை ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ள 24 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பதியப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ரயில் பயணிகளின் உடைமைகள் திருடப்பட்டதாக, ஐந்து ஆண்டுகளில் 418 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக 2023 ஆம் ஆண்டு 138 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக 195 வழக்குகளில் குற்றவாளிகள் மட்டுமே கைது செய்யப்பட்டு உடைமைகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், ரயில் பயணத்தின் போது தவறி விழுந்து 115 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக 2024 ஆம் ஆண்டு 45 பேர் உயிரிழந்துள்ளனர். ரயில் பயணத்தின் போது உடல்நலக் கோளாறு அல்லது சந்தேகமான முறையில் 131 பயணிகள் உயிரிழந்துள்ளனர். ரயிலில் முன்பு பாய்ந்து 254 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி இரும்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் உள்ள 24 காவல் நிலையங்களில் 10 காவல் நிலையங்களில் சுமார் 115 பணியிடங்கள் காலியாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஒருபுறம் தமிழ்நாடு காவல்துறையில் அதிக அளவு பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவருகிறது. மறுபுறம் ரயில்வே பாதுகாப்பு படையின் பணி எந்தளவுக்கு இருக்கிறது என ஐயம் எழுகிறது.