நாய்க்கடிகள் அதிகம் பதிவாகும் மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்த தமிழகம்!
நாட்டில் அச்சுறுத்தும் விஷயமாக உருமாறிக் கொண்டிருக்கிறது நாய்க்கடி. குறிப்பாக, தமிழ்நாட்டில் ரேபிஸ் நோய் மூலம் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக எழுந்துள்ள குரல்கள், அபாயமணியை அடிக்கின்றன.
செல்லப்பிராணியாக வாலாட்டிக்கொண்டுவரும் நாய்களின் இன்னொரு முகம் பயங்கரமானதாக இருக்கிறது. வளர்ப்பு நாய்களே கடிக்கும்நிலையில், தெருநாய்களின் தொல்லையும் அதிகரித்தபடியே இருக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணம்தான் வேளச்சேரியில் நடந்த சம்பவம். அங்கு நாகேந்திரன் என்பவரின் 7 மாத குழந்தையையும், அவரது தாயையும் தெருநாய் ஒன்று கடித்துக் குதறியது.
அதேநாளில் எட்டுபேரை அந்த நாய் கடித்துள்ளது இவர்களுடைய வேதனைக் குரல்களை, சாதாரணமாக கடந்து போக முடியாது. நாய்க்கடி சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்துவருகின்றன.
நாய்க்கடி குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ராஜிவ் ரஞ்சன், கடந்த ஆண்டு மட்டும் 21 லட்சத்து 95 ஆயிரத்து 122 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
இவர்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். நாய்க்கடிக்கு ஆளானவர்களில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பதுதான் வேதனை. நாய்க்கடிகள் அதிகம் பதிவாகும் மாநிலங்களில் நாட்டிலேயே தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது. நாய்க்கடி குறித்து தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அண்மையில் அளித்த பேட்டியில் சில தரவுகளை அளித்திருந்தார்.
இதன்படி, 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 4 லட்சத்து 40 ஆயிரம் நாய்க்கடிகள் பதிவாகி உள்ளன. இறந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக இருக்கிறது. 2024 ல் நாய்க்கடி எண்ணிக்கை 4 லட்சத்து 79 ஆயிரமாக இருக்கிறது. உயிரிழப்பு 40 ஆக பதிவாகி உள்ளது. நாய்க்கடியில் 4 வகைகள் உள்ளன, நாய் கடித்த இடத்தின் காயத்தை மூடக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். நாய் கடித்து 24 முதல் 48 மணி நேரத்திற்குள் தடுப்பூசி செலுத்த வேண்டும், சுயமருத்துவம் கூடாது என்பதும் மருத்துவர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது. தமிழகத்தில் சுமார் 13 லட்சம் நாய்கள் உள்ளன. இவற்றில் தெருநாய்கள் எண்ணிக்கை நான்கரை லட்சம். தொடரும் நாய்க்கடி சம்பவங்களையடுத்து, அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முனைந்துள்ளது தமிழக அரசு. மாநில அரசின் திட்டக்குழு, இதற்கென தனி வரைவுக் கொள்கையையே வகுத்துள்ளது.
தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்படுவதுடன் ஒரு நாய் கூட விடுபடாமல் இருக்க ஊசி போடப்பட்ட நாய்களுக்கு அடையாளக் குறியீடு செய்ய, இக்கொள்கை வலியுறுத்துகிறது. நாய்க்கடி என்பது தீவிரமான சமூக பிரச்னை என்பதால் உடனடி கவனம் செலுத்தவேண்டியதும் அவசியமாகி உள்ளது.