பரந்தூர் மக்கள் போராட்டம் pt web
தமிழ்நாடு

பரந்தூர் விமான நிலைய திட்டம்.. 1000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவு! வருவாய்துறை அறிவிப்பு

பரந்தூர் ஏர்போர்ட் திட்டத்திற்கு நில எடுப்பு பணிகள் தீவிரமாக நடக்கும் நிலையில், 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்து விட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

PT WEB

செய்தியாளர் இஸ்மாயில்

சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள - காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இருதாலுகாக்களில் - பரந்தூரை சுற்றியுள்ள 20 கிராமங்களில் 5,320 ஏக்கர் பரப்பளவில், பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைய உள்ளது.

பரந்தூர் விமான நிலையம்

இதில் அரசு நிலங்கள்போக மீதமுள்ள 3,774 ஏக்கர் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. பரந்துார் ஏ, பரந்தூர் பி, தண்டலம், பொடவூர், தொடூர், நெல்வாய், வளத்துார், மடப்புரம், சேக்காங்குளம், ஆட்டுப்புத்தூர், கூத்திரம்பாக்கம், சிறுவள்ளூர், காரை, அக்கமாபுரம், எடையார்பாக்கம், ஏகனாபுரம், குணகரம்பாக்கம், மகாதேவிமங்கலம், சிங்கிலிபாடி, மதுரமங்கலம் ஆகிய 20 கிராமங்கள் இதற்கான இடங்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதில், 13 கிராமங்களில் விமான நிலைய திட்டமும்,பிற கிராமங்களில் அணுகு சாலைகளும் அமைய உள்ளன. விமான நிலையம் அமைக்கும் திட்ட மதிப்பு 29,150 கோடி ரூபாய் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

பரந்தூரில் விமான நிலையம் அமைவதாக அறிவிப்பு வெளியானது முதல் இத்திட்டத்தை எதிர்த்து, ஏகனாபுரம் கிராம மக்கள், ‘குடியிருப்புகள் விளைநிலங்கள் நீர்நிலைகள் உள்ளிட்டவை அழிக்கப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்’ எனக் கூறி பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு

விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக ஒருபுறம் போராட்டம் நடக்கும் நிலையில், விமான நிலைய திட்டத்திற்கான நில எடுப்பு பணிகளை வருவாய் துறை 21 யூனிட்கள் வாயிலாக தீவிரமாக மேற்கொள்கிறது.

நில எடுப்புக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மற்றொரு தரப்பினர் தங்களது நிலங்களை ஏர்போர்ட் திட்டத்திற்கென வழங்கி வருகின்றனர். கடந்த ஜூலை 9-ஆம் தேதி பரந்தூர், நெல்வாய், பொடவூர், அக்கமாபுரம், வளத்துார் ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 19 பேர் தங்கள் நிலங்களை, முதன்முதலாக விமான நிலைய திட்டத்திற்கு வழங்கினார்கள்.

அதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதவரையிலான கணக்கீட்டின் படி,12 கிராமங்களைச் சேர்ந்த 441 பேர் தங்களது 566 ஏக்கர் நிலங்களை வழங்கிவிட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், அக்டோபர் மாதம் இறுதியிலான கணக்கெடுப்பின்படி, 1,000 ஏக்கர் நிலங்கள், கையகபடுத்தும் பணி முடிந்துவிட்டதாக வருவாய் துறையினர் தெரிவித்து உள்ளனர்.  இதற்காக, இழப்பீடு தொகையாக, 400 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள நிலங்களையும் கையகப்படுத்த விரைவாக நில எடுப்பு பணிகள் நடப்பதாக தெரிவிக்கின்றனர்.