7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளையும் காவிரி படுகை மாவட்டங்கள் உட்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது. ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் ராயப்பேட்டை, மயிலாப்பூர், கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மாநகர பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதேபோல் புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், காசிமேடு, மாதவரம், பெரம்பூர், மாதவரம், புழல் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

