மகளிர் கிரிக்கெட் அணிக்கு பாகுபாடா..? பரிசுத்தொகையில் வேறுபாடு ஏன்? கடந்து வந்த கசப்பான பாதை!
உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு பரிசுத் தொகையில் உள்ள வேறுபாடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்குச் சமமாகவும், சில துறைகளில் ஆண்களைவிட அதிகமாகவும் முன்னேறி வருகின்றனர். ஆண்களிடம் போட்டி போடுவதில் தாங்கள் எந்தவிதத்திலும் கொஞ்சம் சளைத்தவர்கள் அல்ல என்பதை உணர்த்தும் வகையில் நாளுக்குநாள் தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். இருப்பினும், ஒருசில விஷயங்களில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்குச் சலுகைகள் காட்டப்படுவது இல்லை என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டுதான் வருகிறது. உண்மையில் இன்னும் பாலின பாகுபாடுகள் சில விஷயங்களில் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. ஆம், அது தற்போது மகளிர் கிரிக்கெட்டிலும் எதிரொலித்துள்ளது. 2025ஆம் ஆண்டு மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் 47 ஆண்டுகால இந்திய மகளிர் அணியின் ஏக்கம் தணிந்து, கனவு நிறைவேறியுள்ளது. இதையடுத்து, அந்தக் கோப்பையை வாங்கித் தந்த சிங்கப் பெண்களுக்கு வாழ்த்துகளும் பாராடுகளும் குவிந்து வருகின்றன.
மறுபுறம், உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்த இந்திய மகளிர் அணிக்கு, ஐசிசி சார்பில் ரூ.39.78 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, பிசிசிஐ ரூ.51 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. எனினும், 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய ஆடவர் அணிக்கு பிசிசிஐ சார்பில் வழங்கப்பட்ட தொகையைவிட, இது குறைவே ஆகும். அப்போது ஆடவர் அணிக்கு, ரூ.125 கோடி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய மகளிர் அணிக்கு ரூ.51 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அதில் பாதியைக்கூட பிசிசிஐ வழங்கவில்லை. இதுதான் தற்போதைய பேசுபொருளாகி வருவதுடன், உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு பரிசுத் தொகையில் உள்ள வேறுபாடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம், டி20 உலகக்கோப்பையை வென்ற ஆடவர் அணிக்கு ரூ.125 கோடியை வழங்கியபோது, ஒருநாள் உலகக் கோப்பையை வென்றிருக்கும் மகளிர் அணிக்கு ஏன், அத்தகைய தொகையை வழங்கவில்லை என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது.
இந்திய மகளிர் அணிக்கு இவ்வளவு பெரிய தொகையாவது இப்போது கிடைத்திருக்கிறது எனப் பெருமைப்படும் நேரத்தில், இதுகூடக் கிடைக்காமல் அவர்கள் கண்ணீரையும் காயத்தையும் மட்டுமே பெற்றனர் என்பது வரலாற்றுப் பக்கங்களில் நீக்கமற நிறைந்திருக்கிறது தனிக்கதை.
ஆம், ஒருகாலத்தில், ஆடவருக்கு வழங்கப்பட்ட ஊதியம்கூட, இந்திய மகளிர் அணிக்குக் கிடைக்கவில்லை என்பது இன்னும் அது ஒரு வேதனையான விஷயமாக உள்ளது. அதை, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜே பழைய பேட்டியொன்றில் ஒப்புக்கொண்டிருப்பார்.
அந்தப் பேட்டியில் அவர், “அப்போது ஆண்டு ஒப்பந்தங்கள் இல்லை. போட்டிக்குச் சம்பளம் கிடையாது. 2005 உலகக் கோப்பைக்காக மட்டும்தான் ஒரு போட்டிக்கு ரூ.1,000 கிடைத்தது. மற்றபடி, எங்களுக்குப் போட்டிச் சம்பளமே இல்லை" என்று அதில் தெரிவித்திருப்பார். அந்த வீடியோ. தற்போது வைரலாகி வரும் நிலையில்தான், இவ்விவாதமும் இணையத்தைச் சூடாக்கியுள்ளது. ஆனாலும் இதன் பின்னணியிலும் சில காரணங்கள் இருந்துள்ளன. அப்போது மகளிர் அணி, இந்திய மகளிர் கிரிக்கெட் சங்கம் (WCAI) கட்டுப்பாட்டில் இருந்தது. அது, 2006 நவம்பருக்குப் பிறகே பிசிசிஐயுடன் இணைக்கப்பட்டது. அதன்பிறகே, இந்திய மகளிர் அணி சில சலுகைகளைப் பெறத் தொடங்கியது.
பிசிசிஐயின் கீழ் வந்த பிறகுதான் அந்த அணிக்கு போட்டிச் சம்பளம் மற்றும் ஆண்டு ஒப்பந்தங்கள் வரத் தொடங்கின. முதலில் தொடருக்கு ஒருமுறையும், பின்னர் ஒவ்வொரு போட்டிக்கும் சம்பளமும் வழங்கப்பட்டது. இந்தச் சூழலில்தான் ஆடவர் அணிக்கு இணையான சம்பளச் சமநிலையும் கொண்டுவரப்பட்டது. இந்திய மகளிர் கிரிக்கெட்டின் இந்த மாற்றம், பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவுகளால் நிகழ்ந்தது என்றே சொல்லலாம். 2022 அக்டோபரில், இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு சமமான போட்டிச் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம், ஒவ்வொரு வீராங்கனைக்கும் ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம் மற்றும் டி20 போட்டிக்கு ரூ. 3 லட்சம் எனச் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. அந்த வகையில், ஆண்கள் 'கிரேடு A+' வீரர்கள் (ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்றவர்கள்) ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பாதிக்கும் நிலையில், பெண்கள் 'கிரேடு ஏ' வீராங்கனைகளுக்கு (ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா போன்றவர்கள்) ஆண்டுக்கு ரூ.50 லட்சம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. அதேபோல், ஆண்கள் 'கிரேடு ஏ' வீரர்கள் ஆண்டுதோறும் ரூ.5 கோடி பெறும் நிலையில், பெண்கள் 'கிரேடு பி' வீராங்கனைகளுக்கு ஆண்டுக்கு ரூ.30 லட்சம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. அதேபோல், ஆண்கள் 'கிரேடு சி' வீரர்கள் ஆண்டுதோறும் ரூ.1 கோடி பெறும் நிலையில், பெண்கள் 'கிரேடு சி' வீராங்கனைகள் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் பெறுகிறார்கள்.
இப்படி, போட்டிக் கட்டணங்கள் இருவருக்கும் சமமாக இருந்தாலும், வருடாந்திர ஒப்பந்தங்கள் ஆண் மற்றும் பெண் கிரிக்கெட்டர்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க சம்பள இடைவெளியைக் காட்டுகின்றன. இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள், இப்போது ஆண்களைப்போலவே போட்டிக்கான கட்டணத்தையும் சம்பாதிக்கிறார்கள் என்றாலும், அவர்களின் வருடாந்திர தக்கவைப்பாளர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். பெண்களுக்குக் குறைவான போட்டி வாய்ப்புகளே அமையப் பெறுவதுடன், ஒளிபரப்பு உரிமைகளிலும் அவர்களுக்கு குறைவான மதிப்பூதியங்களே வழங்கப்படுகின்றன.
இவையே, அவர்களுடைய சம்பள இடைவெளிக்கும் காரணமாக அமைகின்றன. மறுபுறம், சமமான போட்டி ஊதியங்களை நோக்கிய பிசிசிஐயின் இந்த நடவடிக்கை, வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றாலும், ஒப்பந்த இடைவெளி என்பது இந்திய கிரிக்கெட்டில் உண்மையான ஊதிய சமத்துவத்தைக் காணவேண்டிய இடத்தில் உள்ளது. அது, நிரந்தரமாய்க் கிடைக்கும்போது, இந்திய மகளிர் அணியின் மனங்களில் நிம்மதியும், நிலையான மகிழ்ச்சியும் எப்போது நிலைத்திருக்கும்.

