எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள்
எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் புதியதலைமுறை
தமிழ்நாடு

“அபாண்டமான குற்றச்சாட்டு; இது எதனால நடக்குதுனே தெரியல”-திமுக MLAன் மருமகள் ஆடியோ வெளியிட்டு விளக்கம்

யுவபுருஷ்

தன்னை கொடுமைப்படுத்தியதாக தங்கள் வீட்டில் வேலைப் பார்த்து வந்த சிறுமி அளித்துள்ள புகார் குறித்து திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மருமகள் ஆடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமியின் தாயர் சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். 12ம் வகுப்பு படித்து முடித்த சிறுமி, மேற்படிப்பு படிக்கவைக்க முடியாத நிலையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் இடைத்தரகர் மூலம் பல்லாவரம் சட்டமன்ற திமுக உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார்.

வீட்டு வேலைக்கு சேர்ந்த சிறுமி கடந்த 7 மாத காலமாக ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் ரேகாவை அடித்து துன்புறுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் இருப்பதாக சிறுமி தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே, சிறுமி பொங்கல் தினத்தை முன்னிட்டு தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார். தனது மகளின் உடலில் இருந்த காயங்களை பார்த்த செல்வி, அது குறித்து காரணம் கேட்கவும், ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் அடித்து துன்புறுத்தியதை தாயிடம் அழுதபடி சொல்லி இருக்கிறார்.

மறுநாள் காலை, தனது மகளின் காயங்களுக்கு மருத்துவம் செய்வதற்காக உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு தாய் கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று மதிவாணன் அவரது மனைவி மெர்லினாமீது புகார் அளிக்கப்பட்டது.

சிறுமி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு பலரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்து வந்தனர். இதனையடுத்து, பட்டியலின சிறுமியை துன்புறுத்தியதாக அளிக்கப்பட்டுள்ள புகாரில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ மற்றும் மருமகள் மார்லினா மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்ட பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆபாசமாக பேசுதல், குழைந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், குழைந்தைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பேசிய பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணநிதி, "என் மகனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டு, தற்போது நான் குரோம்பேட்டையில் வசித்து வருகிறேன். நான் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். அவர்கள் திருவான்மியூரில் உள்ளனர். எனக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவருக்கு திருமணம் செய்து வைத்து அனுப்பி விட்டேன். அவர்கள் நினைத்தால் வருவார்கள், நான் எப்போதாவது அவர்களை பார்க்க செல்வேன். அங்கு என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. அதனால் அத பற்றி பேச நான் விரும்பவில்லை. அவர்கள் என்னுடன் இருந்து தவறு செய்திருந்தால் நான் பொறுப்பேற்கலாம். அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் நான் தலையிட விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே சம்பவம் குறித்து ஆடியோ வெளியிட்டுள்ள எம்.எல்.ஏ கருணாநிதியின் மருமகள், தங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அந்த ஆடியோவில், ”இந்த பிரச்சனை எதனால் நடக்கிறது என்பதே தெரியவில்லை. நடந்தது என்னவென்றே புரிந்துகொள்ளாமல் பலரும் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுகின்றனர். நடந்ததை தெரியாமல் யாரும் மற்றவர்களை பேசாதீர்கள். ஒரு அரசியல் பின்புலத்தில் இருந்து வந்துள்ளதால், அதை பயன்படுத்தி அடுத்தவர்கள் மிரட்டி நாங்கள் கொடுமைப்படுத்தவில்லை. இதனை நீங்கள் எங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் கூட கேட்கலாம்.

இந்த பிரச்னை காரணமாக என்னால் கடந்த 3 நாட்களாக சாப்பிட முடியவில்லை. தூங்க முடியவில்லை. எனது குழந்தையை கூட கவனித்துக்கொள்ள முடியவில்லை. இந்த குற்றச்சாட்டு மிகவும் அபாண்டமானது. இதற்கு பின்னால் யார் இருக்கிறார் என்று தெரியவில்லை. அந்த பெண்ணை எங்கள் வீட்டில் ஒரு பெண்ணாகத்தான் பார்த்திருக்கிறேன். அது அவளுக்கே தெரியும்” என்றார்.

தொடர்ந்து அந்த பெண்ணின் பெயரைக் குறிப்பிட்ட அவர், “உனக்கு அக்காவ பத்தி நல்லாவே தெரியும். அக்கா உன்ன எந்த விதத்துலயும் கஷ்டப்படுத்தணும்னு நெனச்சதே இல்ல. உன் கைப்பட லெட்டர் எழுதி வச்சது பேக பேக் பண்ணும்போதுதான் தெரிஞ்சது. இத்தன லவ்வ வசிக்கிட்டு எதுக்காக இதெல்லாம் செய்யுற. எதுனாலும் அக்காக்கிட்ட கேட்டுட்டு செஞ்சிருக்கலாமே. இது சரியில்லமா. ஒரு family அ நீ டேமேஜ் பண்றமா? என்ன பத்தி, அண்ணன பத்தி பேசுற, சரி பரவாயில்ல.. எங்க மாமனார் என்னம்மா பண்ணாரு.. எத்தன வருச உழைப்பு தெரியுமாம்மா.

எத்தன நாள் நைட்டும் பகலும் தூங்காம.. எவ்ளோ பேர பாத்து கஷ்டப்பட்டு, இதெல்லாம் உனக்கு தெரியாதாம்மா. எங்க குடும்பத்துக்குள்ளவே இதுனால பெரிய பிரச்சன வராதாம்மா. அதெல்லாம் நீ யோசிக்க மாட்டியா. எந்த குற்றச்சாட்ட முன்வைக்கறதா இருந்தாலும், எங்கள பத்தி கூட நீ பேசு. ஆனா, பொதுவாழ்க்கையில இருக்கவங்கள இழுத்து கவனத்த கொண்டு வரணும்னு நினைக்கக்கூடாதும்மா. அது சரியில்ல” என்றவர், இந்த செய்தியை என்னால் அவளிடம் கடத்த முடியவில்லை. மீடியாதான் இதனை கடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.