வேலைக்கு வந்த பெண்ணை துன்புறுத்திய விவகாரம்: பல்லாவரம் MLA-வின் மகன், மருமகள் மீது வழக்குப்பதிவு

பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மெர்லினா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டோ மற்றும் மெர்லினா
ஆண்டோ மற்றும் மெர்லினாpt web

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநறுங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற இவர், வீடு திரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இவருடைய மனைவி செல்வி என்பவர், சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்துள்ளார்.

செல்வி, சென்னை திருவான்மியூர் பகுதியில் இடைத்தரகர் சித்ரா என்பவர் மூலம் 12ம் வகுப்பு படித்து முடித்த தன் மகள் ரேகாவை, பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார்.

ரேகா 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதால், அவரை ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா ஆகியோர் கல்லூரியில் படிக்க வைப்பதாக உறுதியளித்ததாக தெரிகிறது. கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்ட ரேகாவை, தனது குழந்தை அழும்போதெல்லாம், ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ரேகாவை சிகரெட் கொண்டு ஆண்டோ மதிவாணன் சூடு வைத்ததாகவும் தெரிகிறது. மேலும் எம். எல். ஏவின் மருமகள், ரேகாவின் தலை முடியை வெட்டி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஏழு மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து சித்தரவதை செய்யப்பட்டு வந்ததையடுத்து, தான் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் ரேகா. இதற்கிடையே, பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேகாவை வீட்டிற்கு வருமாறு அவரது தாய் அழைத்துள்ளார். அப்போது, “நீ துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது. மீறி சொன்னால் கொலை செய்து விடுவோம்” என்று ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ரேகாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ரேகாவை காரில் அழைத்து வந்து திருநறுங்குன்றம் கிராமத்தில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

இதற்கிடையே, ரேகாவுக்கு உடலில் பல இடங்களில் காயம் இருப்பதால், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்.எல்.ஏ மகனால் தான் துன்புறுத்தப்பட்டதாக உளுந்தூர்பேட்டை போலீஸில் ரேகா புகார் அளித்த நிலையில், இதுதொடர்பான தகவல் திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தரப்பட்டுள்ளதாக அங்குள்ள காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மற்றும் மருமகள் மெர்லினா மீது நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் அடுத்தடுத்த விசாரணையில் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com