ரூ.5.9 லட்சத்திற்கு ஏலம் போன ஒரே ஒரு எலுமிச்சை pt desk
தமிழ்நாடு

பழனி தைப்பூசத் திருவிழா | ரூ.5.9 லட்சத்திற்கு ஏலம் போன ஒரே ஒரு எலுமிச்சை - சிறப்பு என்ன?

தைப்பூசத்தன்று பழனி முருகன் திருவடியில் வைத்து பூஜை செய்த ஒரு எலுமிச்சம் பழத்தை திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார்கள் ஏலம் விட்ட நிலையில், அதனை அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர் 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்

PT WEB

செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார் சமூகத்தினர் தைப்பூசத் திருநாளை விமர்சியாக கொண்டாடும் வகையில் தைப்பூசத்திற்கு முதல் நாளிலிருந்து தைப்பூசம் முடிந்து மறுநாள் வரை மூன்று தினங்கள் பழனியில் தங்கி பல்வேறு கட்ட நிகழ்ச்சிகளை நடத்தி சாமி தரிசனமும் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார் சமூகத்தினர் பழனிக்குச் சென்று தைப்பூசத்தை விமர்சையாக கொண்டாடியுள்ளனர்.

இவர்கள் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும்போதும் சாமி தரிசனம் உள்ளிட்டவற்றைச் செய்யும் போதும் ஒவ்வொரு எலுமிச்சம் பழம் வைத்து பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டும் அதேபோல் ஒவ்வொரு எலுமிச்சம் பழம் வைத்து பூஜை செய்த நிலையில், அந்த எலுமிச்சம் பழத்தை நேற்று பழனி பெரியநாயகி அம்பாள் கோயில் அருகே உள்ள திருவரங்குளம் வல்லநாட்டு நகரத்தாருக்குச் சொந்தமான பொது மடத்தில் வைத்து ஏலம் விட்டுள்ளனர்.

இந்த ஏலத்தில் அதே திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொண்டு பழங்களை ஏலம் எடுத்துள்ளனர். குறிப்பாக காலை உணவு இரவு உணவு மதிய உணவு உள்ளிட்ட உணவு சமைத்து அன்னதானம் வழங்கியபோது செய்யப்பட்ட பூஜையில் வைக்கப்பட்ட ஒவ்வொரு எலுமிச்சம் பழமும் 16,000 முதல் 40,000 வரை ஏலம் போனது. இதையடுத்து ஏலத்தின் இறுதியாக தைப்பூச தினத்தன்று பழனி முருகன் திருவடியில் வைத்து பூஜை செய்த ஒரு அபிஷேக எலுமிச்சம் பழத்தை ஏலம் விட்டனர்.

Palani temple

இந்நிலையில் அந்த எலுமிச்சம் பழத்தை தங்கள் வசப்படுத்திக் கொள்ள, ஏலத்தில் கலந்து கொண்ட பலரும் ஒரு லட்சம் இரண்டு லட்சம் மூன்று லட்சம் என ஏலம் கேட்டு வந்த நிலையில், இந்த ஏலத்தில் கலந்து கொண்ட ஒருவர் 5 லட்சத்து 9 ஆயிரம் என்று கூறி அந்த ஒரு எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்து பலரையும் வியக்க வைத்துள்ளார். இந்த தகவல் கேள்விப்பட்ட பலரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.