ஒடிசா | பத்மஸ்ரீ விருது விவகாரம்.. இருவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
2023ஆம் ஆண்டு ஒடிசாவிலிருந்து அந்தர்யாமி மிஸ்ரா என்பவருக்கு கலை இலக்கியப் பிரிவில் பத்மஸ்ரீ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற வண்ணமிகு விழாவில் பத்திரிகையாளர் அந்தர்யாமி மிஸ்ரா பத்மஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டார். ஆனால் விருது அறிவிக்கப்பட்டது தனக்குதான் என்றும் தான் ஒடியா மொழியிலும் பிற மொழிகளிலும் 29 புத்தகங்கள் எழுதியிருப்பதாகவும் ஆனால் தன் பெயர் உள்ள வேறு ஒரு நபர் விருதை பெற்றுக்கொண்டதாகவும் அந்தர்யாமி மிஸ்ரா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மேலும் கலை இலக்கியப் பிரிவில் விருது பெற்ற ஆள் மாறாட்டம் செய்த நபர் எந்த ஒரு புத்தகத்தையும் எழுதவில்லை என்பதையும் வழக்குத் தொடர்ந்த அந்தர்யாமி மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார். ஆனால் தனக்குதான் விருது அறிவிக்கப்பட்டதாக அதைப் பெற்றுக்கொண்ட அந்தர்யாமி மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார். விநோதமான இவ்வழக்கில் இருவரும் நேரில் ஆஜராகி விருதுக்கு ஏற்ற வகையில் தாங்கள் உருவாக்கிய படைப்புகள் உள்ளிட்ட ஆதாரங்களை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார். குடியரசுத் தலைவர் கையால் விருது பெறுபவரை தேர்வு செய்வதில் நேர்ந்த இக்குழப்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.