பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை ஆதரிப்பதாக பா.சிதம்பரம் கூறினாலும், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார். 50% உறுப்பினர் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட பின் நடைபெறும் மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகள் 58 இலிருந்து 46 ஆக குறையும் நிலையில், வடமாநிலங்களுக்கு அதிக இடங்கள் சேரும் அபாயம் இருப்பதாக அவர் விளக்குகிறார்.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும் திட்டமாக, லோக்சபா உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850ஆக அதிகரிக்கும் அரசியலமைப்பு திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா போன்ற மசோதாக்களை இன்று நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இம்மசோதாக்களின் படி மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டு, பெண்களுக்கு 280 இடங்களாக ஒதுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்தசூழலில் தான் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு உள்ளது என்றும், வடமாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்றும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால் தென்னிந்திய மாநிலங்களை விட வட மாநிலங்களுக்கே அதிக தொகுதிகள் சேரும் வாய்ப்பு உள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே 1967-இல் நடத்தப்பட்ட மறுவரையறையில் 2 தொகுதிகளை இழந்த தமிழ்நாடு 41 தொகுதிகளிலிருந்து 39ஆக மாறியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இந்நிலையில் தான் தொகுதி மறுவரையறை செய்தால் தென்மாநிலங்களில் என்ன பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தை எச்சரித்துள்ளார் பா.சிதம்பரம்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், “தொகுதி மறுவரைறை என்பது 39 தொகுதிகளில் இருந்து 32ஆக குறையும் போது அது உடனடியாக அனைவருக்கும் தெரிந்து விடும். ஆனால் மக்களவையில் 50 சதவீத எண்ணிக்கையை உயர்த்திவிட்டு, பின்னர் மறுசீரமைப்பு செய்கிறோம் என்று சொல்லும்போது எவ்வளவு குறைகிறது என்பது மக்களிடம் நேரடியாக சென்று சேராது.
அவர்கள் 50 சதவீதம் உயர்த்தும் போது தமிழகத்தில் 58 தொகுதிகளாக உயரும், ஆனால் தொகுதி மறுவரையறைக்கு பின்பு அது 46ஆக குறையும். அதோபோல உத்திரபிரதேசத்தில் தற்போதுள்ள 80 மக்களைவை தொகுதி 120 தொகுதியாக உயர்ந்து, பின்னர் டிலீமிட்டேசனுக்கு பின்பு அது 140ஆக உயரும். இந்த மறுவரையறை என்பது தென் மாநிலங்களை மிக மிக அதிகமாக பாதிக்கும்.
மக்களவையில் தற்போதுள்ள உறுப்பினர்களில் 24.3 சதவீதம் உறுப்பினர்கள் தென்மாநிலங்களில் உள்ள 5 மாநிலங்களை சேழ்ந்தவர்கள், இது தொகுதி மறுவரையறைக்கு பின் 20.7 சதவீதமாக குறையும். இதனால் நாடாளுமன்ற வாக்கு சதவீதம் வெகுவாக குறைக்கப்பட்டு, தென் மாநிலங்களின் குரல் அழுத்தப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு என்பதை ஆதரிக்கின்றோம், இதை கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சிதான். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 543-ல் உடனடியாக 3-ல் ஒரு பங்கு உயர்த்த வேண்டும் என 24 தேர்தலிலேயே நாங்கள் வலியுறுத்தினோம்.
தொகுதி மறுவறையறை தொடர்பாக ஏபரல் 29ஆம் தேதி இந்த கூட்டத்தை கூட்டலாமே ஏன் இவ்வளவு அவசரமாக கூட்டுகின்றனர். நாடாளுமன்ற கூட்டத்தை 13 நாட்கள் கடந்து போடுவதால் என்ன பிரச்சனை. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த 39 பேரும் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கடைசி 5 நாட்கள் தேர்தல் வேலை தீவிரமாக நடக்கும் இந்த நேரத்தில் பிரச்சாரத்தை முடக்கவே நாடாளுமன்றத்தை கூட்டுகின்றனர், இது திட்டமிட்ட சதி” என குற்றஞ்சாட்டினார்.