தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து இருப்பது,அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. கட்சிகள் கூட்டணி தொடர்பாகவும், தொகுதிப் பங்கீடுகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இன்னொரு புறம் பெரிய கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை அறிவித்து பிரசாரத்தைத் தொடங்கி வருகின்றன. இந்த நிலையில், தேமுதிக திடீரென திமுக பக்கம் கூட்டணி வைத்ததால், ராமதாஸ் தலைமையிலான பாமக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பெரிய தலைகள் மட்டும் எந்தப் பக்கம் செல்லும் என எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம் செயல்பட்டு வந்தது. தவிர, அவர் யாருடன் கூட்டணி வைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. இருப்பினும், எந்தவித முடிவும் எடுக்காமல் ஓபிஎஸ் காலம் தாழ்த்தி வந்தார். ’தை பிறந்தால் வழி பிறக்கும்’ என ஓ.பன்னீர்செல்வம் கூறிவந்த நிலையில், அவரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வாய்ப்பில்லை என அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். பாஜகவும் ஓ.பன்னீர்செல்வத்தை கைவிட்டுவிட்டது. இணக்கமாக இருந்த டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியிலும், செங்கோட்டையன் தவெகவிலும் இணைந்தனர். என்ன செய்யப்போகிறார் ஓ.பன்னீர்செல்வம் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் திமுகவில் ஐக்கியமாகினர்.
இந்நிலையில், சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் அறைக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளார். அவரது மகன் ரவீந்திரநாத்தும் உடன் சென்றார். முதல்வருடனான ஓ.பன்னீர்செல்வத்தின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் இறுதியில் அடையாறு பூங்காவில் நடைப்பயிற்சியின்போது முதல்வரைச் சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அன்றைய தினம் மாலையே ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கும் சென்று சந்தித்துப் பேசியிருந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுற்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் முதல்வரைச் சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சி சிறப்பாக இருந்தது. இதற்கு வாழ்த்து தெரிவிக்க காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன். திமுகவின் ஐந்து ஆண்டுகால ஆட்சி சிறப்பாக இருந்ததால், மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. மக்கள் நினைப்பதைத்தான் எனது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்" தி.மு.க.வில் இணைவீர்களா என்று கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், "பொறுத்து இருந்து பாருங்கள்” என்று தெரிவித்தார். இதையடுத்து, அவர் விரைவில் திமுகவில் இணையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ”முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆசியுடன் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வர வேண்டும்” என அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் பேசியுள்ளார். சட்டமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், ”எம்ஜிஆரின் சத்துணவுத் திட்டம்போல், முதல்வர் மு.க.ஸ்டாலினின் காலை உணவுத் திட்டம் பாராட்டப்படும்” என குறிப்பிட்டார்.