அதிமுகவில் இடமில்லை.. தை பிறந்தால் புதிய கட்சி பிறக்கிறதா? ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம்!
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட கள அனுபவமும், அதிமுகவில் ஒரு பிரிவினர் மத்தியில் செல்வாக்கும் கொண்டிருப்பதால் தேர்தல் களத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் சக்தியாகவே முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்க்கப்படுகிறார். அதிமுக செல்வாக்கு செலுத்தும் பாரம்பரிய வாக்கு வங்கிகளில் ஒன்றான, முக்குலத்தோர் சமூக வாக்குகளை ஈர்க்கவும் பன்னீர்செல்வம் உதவியாக இருப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
தமிழ்நாட்டில் குறைந்தது 50 தொகுதிகளில் சுமார் 8 விழுக்காடு வாக்குகளை கொண்ட முக்குலத்தோர் சமூக வாக்குகளை ஈர்ப்பதில் நீண்டகாலமாக அதிமுகவே செல்வாக்கு செலுத்திவந்தது. ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியில் ஏற்பட்ட பூசல்களின் விளைவாக, சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் மூவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, படிப்படியாக அந்த வாக்குகள் திமுக பக்கம் திரும்பின. குறிப்பாக, தென் தமிழகத்தில், பெரும் வாக்கு மாற்றம் ஏற்பட்டது. இதனை உணர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பு முயற்சியை வலியுறுத்தி வந்தது பாஜக.
ஆனால், இந்த தலைவர்களைச் சேர்ப்பது கட்சியை எதிர்காலத்தில், நாசப்படுத்தும் என்று கருதினார் அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி. தவிர அவர்களுக்கு டெல்லியோடு உள்ள தொடர்பும், பழனிசாமியை எரிச்சலுக்கு உள்ளாக்கியது. தற்போது அதிமுகவிலும் இடமில்லை கூட்டணியிலும் இடமில்லை என்றாகிவிட்ட சூழலில் திமுக, தவெக இரு தரப்புமே பன்னீர்செல்வத்தை நோக்கி கையசைப்பதாக தெரிகிறது. ஆனால், திமுகவில் பன்னீர்செல்வம் இணைவது இதுவரையிலான அவரது எம்ஜிஆர் நிழல் அரசியலை குலைத்துவிடும். அதேபோல, தவெகவில் இணைவது மூன்று முறை முதல்வர் பதவி வகித்தவருக்கு மதிப்பாக இருக்காது என்ற எண்ணம் பன்னீர்செல்வம் தரப்பினர் இடையே இருக்கிறது.
அதேபோல, தினகரனின் அமமுகவில் இணைவதும் தன்னுடைய சுதந்திர செயல்பாட்டை பாதிக்கும் என்று எண்ணுகிறார் ஓ.பன்னீர்செல்வம். இத்தகைய பின்னணியில் தனிக்கட்சி தொடங்கி, திமுக அல்லது தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற யோசனை, அவரது ஆதரவாளர்களிடம் பரவலாக பேசப்படுகிறது. இதில் தவெகவை நோக்கி அவர் நகரும் வாய்ப்பே அதிகம் உள்ளதாகவும், ஜனவரி 17, எம்ஜிஆர் பிறந்தநாளன்று தன்னுடைய புதிய கட்சியை அவர் அறிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக எதிர் அதிமுக அரசியலில், அதிமுக இடத்தில் தன்னை நிறுத்திக்கொள்வதில் மிகுந்த முனைப்போடு இருக்கும் தவெக, எம்ஜிஆர் ஜெயலலிதாவின் செல்வாக்கை வரித்துக்கொள்ள பன்னீர்செல்வம் பெருமளவில் உதவுவார் என்று நம்புகிறது. பன்னீர்செல்வத்தின் முடிவு ஜனவரி 17இல் தெரியவரும் என்பதையே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று அவர் வெளிப்படுத்தியிருப்பதாக கூறுகிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.

