இசைவாணி, கடவுள் ஐயப்பன், தமிழிசை சௌந்தரராஜன், ஹெச். ராஜா pt web
தமிழ்நாடு

இசைவாணியின் ஐயப்பன் பாடல் விவகாரம்: மதரீதியான மோதலை தூண்டும் செயலை செய்வது யார்? விரிவான அலசல்...

கிட்டதட்ட 6 வருடங்களுக்கு முன்பு கானா பாடகி இசைவாணி பாடிய “ஐ யம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா” எனும் பாடல், இப்போது வைரலாகி சர்ச்சைகுள்ளாகி வருகிறது.

அங்கேஷ்வர்

6 வருடங்களுக்குப் பின் சர்ச்சையான ‘ஐ யம் சாரி ஐயப்பா’ பாடல்

கிட்டதட்ட 6 வருடங்களுக்கு முன்பு கானா பாடகி இசைவாணி பாடிய “ஐ யம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா” எனும் பாடல், இப்போது வைரலாகி சர்ச்சைகுள்ளாகி வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் இப்பாடல். இது பெண்களின் உரிமைகளையும் பேசியிருந்தது.

ரஞ்சித் - இசைவாணி

இப்பாடல் ஐயப்பனுக்கு எதிரானது எனவும், இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது எனவும் பலரும் தங்களின் கண்டனத்தை இணையத்தில் ஆறு வருடங்களுக்குப் பின்னர், அதாவது 2024-ல் தற்போது பதிவு செய்து வருகின்றனர். இதில் இயக்குநர் மோகன் ஜி இசைவாணியை கைது செய்ய வேண்டுமென பதிவு செய்திருந்தார்.

இப்பாடலை பா. ரஞ்சித்தின் காஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ் அமைப்பு உருவாக்கியது. இந்த பாடல் தொடர்பாக தற்போது சர்ச்சை உருவானதும் நீலம் அமைப்பு இந்தப் பாட்டு தொடர்பான அறிக்கை ஒன்றை இணையத்திலும் வெளியிட்டது. அதில், இசைவாணி பக்கம் தாங்கள் நிற்பதாக உறுதிபட தெரிவித்தது நீலம். இதுதொடர்பான அறிக்கையில், “ 'I am Sorry Iyyappa' என்ற பாடல் ஆண்டாண்டு காலமாக இங்கு பேசப்பட்டுவரும் கோவில் நுழைவு உரிமையைக் கோருகிற வரிகளோடு துவங்கி பின் பெண்களின் உரிமைகளைப் பறிக்கும், பொதுவான உரிமைகளைக் கோரும் பாடலாக அமையப் பெற்றது. இந்தப் பாடலைப் பாடியது இசைவாணி. எழுதி இசையமைத்தது The Casteless Collective” என குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்க்கும் பாஜக

இதனிடையே, இசைவாணியின் செல்போன் எண்ணுக்கு பலரும் மோசமான குறுஞ்செய்திகளையும் கொலை மிரட்டல்களையும் விடுத்துள்ளனர். இது தொடர்பாக இசைவாணி சென்னை காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்திருந்தார்.

தமிழிசை சௌந்தரராஜன்

இதற்கிடையே அரசியல் தலைவர்கள் பலரும் இதில் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். அதில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “தற்போது சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வரும் சூழ்நிலையில் இசைவாணி என்பவர் ஐயப்பன் மீது அவதூறாக பாடல் பாடி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ஆனால், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது இந்த அரசு. இதற்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

எச் ராஜா கூறுகையில், “கார்த்திகை மாதம் ஐயப்பனுக்கு பலர் மாலையிட்டுள்ள சூழ்நிலையில், ஐயப்பன் குறித்து கேளியும், கிண்டலமாக பாடியுள்ள இசைவாணியை தமிழக காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். கஸ்தூரியை கைது செய்த காவல்துறை இசைவாணியை ஏன் கைது செய்யவில்லை? தமிழக அரசு இந்து விரோத அரசு என தெரியும், ஒரு வேலை காவல் துறையும் இந்து விரோத காவல் துறையாக மாறிவிட்டதா?” என கேள்வி எழுப்பினார். பல இடங்களில் காவல்துறையில் இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

“தமிழிசையும் இதேபோல் பேசுவது வெட்கக்கேடானது” - த.மு.எ.க.ச

இதையடுத்து இன்று தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், “இசைவாணியின் உருவப்படத்தை சித்தரித்தவர்கள், அலைபேசியில் அழைத்து மிரட்டியவர்களின் விவரங்களுடன் காவல்துறையில் புகார் அளித்தும், காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல.

தமுஎகச

பாடல் உட்பொருளின் நியாயத்தை எதிர்கொள்ள திராணியற்ற சங்பரிவாரத்தினர், இசைவாணி வேறு மத்தவர் என்ற பொய் சொல்லி, இந்து மதக் கடவுளை இழிவுபடுத்திவிட்டார் என்ற மதரீதியாக மோதலைத் தூண்டும் இழி செயலில் இறங்கியுள்ளனர். பெண்களை தெய்வமாக போற்றுவதாக கூறிக்கொண்டே ஒரு பெண் கலைஞரை வக்கிரமாக சித்தரித்து அச்சுறுத்தி அவதூறு செய்து வருகின்றனர் இணையப் பொறுக்கிகள். ஆளுநராக இருந்த தமிழிசையும் இதே ரீதியில் பேசுவது வெட்கக்கேடானது.

பெண்கள் வழிபாட்டு உரிமை கோரினாலே இந்துக்களின் மணம் புண்படும் என்றால் இவ்வளவு காலம் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ள பெண்கள் இந்துக்கள் இல்லையா. அவர்களது மணம் புண்படாதா? சமூகத்தை அமைதியின்மையில் மூழ்கடித்து கவனக்குவிப்பு பெறும் மலிவான முயற்சியில் ஈடுபடும் சங்பரிவார கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பெருமாள் முருகனுக்கும் இதுவே நடந்தது” - ஆதவன் தீட்சண்யா

பெருமாள் முருகன்

இந்த விவகாரம் தொடர்பாக தமுஎகச பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறுகையில், “எழுத்தாளர் பெருமாள் முருகன் வழக்கை எடுத்துக்கொண்டால், தமிழில் புத்தகம் (மாதொருபாகன்) வெளியாகி ஏழெட்டு ஆண்டுகள் கழித்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வரும்போது பிரச்னை செய்தனர். ‘பெருமாள் முருகன் என்ற ஒரு எழுத்தாளன் இறந்துவிட்டான்’ என அவர் அறிவிக்கும் அளவுக்கு கொண்டு சென்றார்கள். அந்த நாவல் பேசிய மையக்கருத்தை மக்களது மத்தியில் சொல்வதற்கு பதிலாக, மக்களை இழிவுபடுத்திவிட்டதாக பதற்றத்தை உருவாக்கினார்கள். அந்த சாதி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற வேண்டும் என்பதற்காக இம்மாதிரி செய்தார்கள்.

ஆதவன் தீட்சண்யா

இந்து மக்கள் கட்சி தங்களை இந்துக்களுக்கானவர்களாக முன்னிறுத்திக்கொள்ள முயற்சிக்கிறது. தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், தலைப்புச் செய்தியாக மாற்றிக்கொள்வதற்கும் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.

இசைவாணி எந்த ஒரு மதத்தினையும் புண்படுத்தவில்லை. அந்தப்பாடலின் முதல் வரி மட்டும்தான் ஐயப்பனைப் பற்றி இருக்கும். மற்ற வரிகள் பெண்களுக்கு இருக்கும் வேறுவேறு ஒடுக்குமுறைகள், பெண் விடுதலை, பெரியார் கருத்துகள் இவைகளைத்தான் பேசி இருக்கும். இரண்டாவது இசைவாணியை கிறிஸ்த்தவர் என தவறாக முன்னிறுத்துகிறார்கள். அவர் பொட்டும்தான் வைத்துள்ளார். அதற்கு என்ன சொல்வீர்கள்? யேசுதாஸ் கிறிஸ்த்தவர், அவர் பாடிய ஐயப்பன் பாடலை ரசிக்கத்தானே செய்கிறார்கள். பிற மதத்தவர் ஏன் எங்கள் மதத்தினைப் பற்றி பாடுகிறார் என கேட்கவில்லையே..

தங்கலானுக்கு நடந்தது என்ன?

சமீபத்தில் தங்கலான் படம் வெளிவந்தது. ஓடிடியில் வெளிவரும் சமயத்தில், படம் வைணவத்தை கிண்டல் செய்வதாக இருக்கிறது என வழக்கு தொடர்ந்தார்கள். அந்த காட்சிகளை நீக்கிவிட்டுத்தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என சொன்னார்கள். உயர்நீதிமன்றம் இந்த வழக்கில், ‘படம் வெளியாகி 60 நாள் ஆகிவிட்டது. இந்தக் காலக்கட்டத்தில் நீங்கள் சொல்வதுபோல் மக்கள் மனது புண்பட்டிருந்தால், அதற்கான விளைவை அது உருவாக்கி இருக்கும். ஆனால், அப்படி ஏதும் நடக்காதபோது, உங்களது கருத்தை ஏன் சமூகத்தின் பொதுக்கருத்தாக மாற்ற முயற்சிக்கிறீர்கள்?’ என கேள்வி எழுப்பியது. ஐயப்பன் பாடல் விவகாரத்திலும் 6 ஆறு வருடங்கள் ஆகிவிட்டது. அவர்கள் சொல்வதுபோல், மக்கள் மனம் புண்பட்டிருந்தால், ஆறு வருடங்களாக இல்லாமல் இப்போதுதான் மனம் புண்படுமா?” என கேள்வி எழுப்பினார்.

“மதச்சார்பற்ற அரசியல் பாஜகவிற்குத் தடை” - ராஜ கம்பீரன்

பத்திரிக்கையாளர் ராஜ கம்பீரன்

பத்திரிகையாளர் ராஜ கம்பீரனை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறியதாவது, “மதத்தின் பெயரால் மக்களை அணிதிரட்டுவது என்பதை தமிழகத்தில் அவர்களால் செய்ய முடியவில்லை. சாதி ரீதியாகக் கூட அணி திரட்ட முடிகிறது. மதத்தின் பெயரால் முடியவில்லை. மதச்சார்பற்ற அரசியல் தமிழகத்தில் இருக்கிறது. அது பாஜக வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. எனவே இம்மாதிரியான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்து மதத்திற்கு ஆபத்து என்பது போன்ற தூண்டலை உருவாக்கி, மதவாதத்திற்கான விதையை உருவாக்க இதுபோன்ற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதை அரசு அனுமதிக்கக்கூடாது.

கஸ்தூரி விவகாரத்தையும், இசைவாணி விவகாரத்தையும் ஒப்பிடுகிறார்கள். கஸ்தூரி தெலுங்கு மக்களை கொச்சைப்படுத்தி அவர்கள் மீது துவேஷம் செய்தார். ஆனால், இசைவாணி வழிபாட்டு உரிமைக்கு பெண்களை உள்ளே அனுமதிக்கக்கூடாதா என கேட்கிறார். இந்த இரண்டும் ஒன்றா? இசைவாணியை கைது செய் என்கிறார்கள். முதலில் இது நீதிமன்றத்திலாவது நிற்குமா?” என தெரிவித்தார்.