தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு | 8 பேரால் அடித்துக் கொல்லப்பட்ட பட்டியலின இளைஞர்.. ம.பியில் அதிர்ச்சி!
என்னதான் இந்தியாவில் கடுமையான சட்டங்களும் தண்டனைகளும் இருந்தாலும் சாதிய ரீதியான தாக்குதல்கள் மட்டும் அவ்வப்போது நாடு முழுவதும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம்தான் தற்போது மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஷிவ்புரியைச் சேர்ந்தவர் நாரத் ஜாதவ். 28 வயதான இவர், தன் தாய் மாமா ஊரான இந்தர்கர் கிராமத்திற்குச் சென்றுள்ளார். அங்கு, அவர் கடந்த நவம்பர் 26ஆம் தேதி வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது, சர்பஞ்ச் பதம் சிங் தாகத் என்பவர், தனது குடும்ப உறுப்பினர்கள் அங்குச் சென்றுள்ளார். இதனால் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக நாரத்துக்கும் சர்பஞ்ச்வுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், சர்பஞ்ச்வும் அவரது குடும்ப உறுப்பினர்களும் நாரத்தை கட்டைகளால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இறுதியில், நாரத் அவரது உறவினர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனாலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சர்பஞ்ச் பதம் சிங் தாகத், பெடல் தாகத், ஜஸ்வந்த் தாகத், அவதேஷ் தாகத், அங்கேஷ் தாகத், மொஹர் பால் தாகத், தக்கா பாய் தாகத் மற்றும் விமல் தாகத் ஆகிய 8 பேர்மீது போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.