“முதல்வர் குறித்து மருத்துவர் ராமதாஸ் கூறியது மட்டும் சரியா..?” - எம்.பி. திருச்சி சிவா எதிர்கேள்வி!
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, பிரதமர் மோடி தனது கடமையை செய்யவில்லை என்றும், மருத்துவர் ராமதாஸ் கூறிய வார்த்தைகள் சரியானதா என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு..
செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய அவர், “பிரதமர் எதிர்கட்சிகள் மீது குற்றம்சாட்டி வருகிறாரே தவிர, தனது கடமையை செய்கிறாரா?. நாடாளுமன்ற வளாகம் வரும் பிரதமர் அவைக்கு வருவதில்லை, விவாதம் நடத்துவதில்லை, கேள்விகளுக்கு பதிலளிப்பதும் இல்லை.
பிரதமர் பதவி என்பது மிகப்பெரிய பொறுப்பு என்பதை மறந்துவிட்டாரா அவர்? ஒரு ஆண்டுக்கு மேலாக மணிப்பூரில் கலவரம் நடந்துவருகிறது. கலவரத்தை தடுக்கவும், அமைதியை ஏற்படுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. இதுகுறித்து பிரதமர், உள்துறை அமைச்சர் பதில் தர மறுக்கின்றனர். எதிர்கட்சிகள் இப்பிரச்னை குறித்து பேசினாலும் அதனை ஏற்பதில்லை, பேச அனுமதிப்பதும் இல்லை.
அதேபோல அதானி விவகாரம் தொடர்பாக பதிலளிக்கவும், பேசுவதற்கும் அரசு முன் வரவில்லை. எந்த கோரிக்கையையும் அவைத்தலைவர் ஏற்பதில்லை, நிராகரித்து வருகிறார். விவாதிக்கவும் அனுமதிப்பதில்லை, எங்கே செல்கிறது இந்த நாடு என்பது தெரியவில்லை” என குற்றஞ்சாட்டினார்.
அன்புமணி ராமதாஸ் கூறியது சரியா?
தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அன்புமணி ராமதாஸ் கூறிய கருத்துக்கு பதில் அளித்த திருச்சி சிவா, “மருத்துவர் ராமதாஸ் மீது முதலமைச்சர் வைத்தது ஒரு கருத்து. ஆனால் மருத்துவர் ராமதாஸ் அவர்கள், முதலவர் பொறுப்புக்கு வந்த ஒருவரை பார்த்து ‘என் தகுதிக்கு இவரை போய் நான் சந்திப்பதா?’ என கூறினார். அது சரியான அணுகுமுறையா?” என எதிர்கேள்வி எழுப்பியுள்ளார்.