இராமானுஜம்.கி
பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவுடனான சந்திப்பு அதிமுகவிற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் காய் நகர்த்தலே என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
“நீங்கள் நாடாளுமன்ற தேர்தலில் எங்களோடு இருந்திருந்தால் தமிழகத்தில் கணிசமான சீட்டுகளை வென்று இருக்கலாம்” என அமித் ஷா கூறியதாக தெரிகிறது. உடனே சுதாரித்த எடப்பாடி பழனிசாமி, ராஜ்ய சபா தேர்தலில் ஒரு சீட்டை உங்களுக்கு தருகிறோம் எனக் கூறினாராம். இதைக் கேட்டு சிரித்த அமித் ஷா, பார்க்கலாம் என்றாராம்.
எடப்பாடி இப்படி பேசியதன் பின்ணணி என்ன நாம் விசாரித்தபோது, அந்த ஒரு சீட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை டில்லிக்கு அனுப்பிவிட்டால் சீட் ஷேரிங் டாக்ஸ் எளிதாக நடக்கும் என்கின்றனர் விபரமறிந்த அதிமுக நிர்வாகிகள்.
இதனை பாஜகவும், அண்ணாமலையும் ஏற்பார்களா? என பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, அண்ணாமலையை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளராகவே அவர் இருக்க விரும்புகிறார். அதற்கு தற்போது வாய்ப்பில்லை என்பது தெளிவாகி விட்டது. அதேநேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான் வரும் சட்டமன்ற தேர்தலில் ஏற்படும் என அமித் ஷா எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அது தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படும் என்பதையே காட்டுகிறது என பாஜக நிர்வாகிகள் கண் சிமிட்டுகின்றனர்.
அப்போது துணை முதல்வர் சான்ஸ் கூட அண்ணாமலைக்கு கிடைக்கலாம் என்கின்றனர் பாஜக நிர்வாகிகள். அதிமுகவை பொறுத்தவரை தங்களை அண்ணாமலை கடுமையாக விமர்சித்ததை கூட ஏற்றுக்கொள்வோம். நாங்கள் தெய்வமாக மதிக்கும் ஜெயலலிதாவை விமர்சித்ததை எங்கள் தொண்டர்கள் என்றும் மறக்கமாட்டார்கள். இதுபோன்ற கருத்துகளை நேற்றைய சந்திப்பில் அமித் ஷாவிடம் எடுத்துரைத்தோம் என்கின்றனர் அதிமுக மூத்த நிர்வாகிகள்.
இதற்கிடையே அதிமுக ராஜ்ய சபா சீட் கொடுத்தால், அதுபெரும்பாலும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு ஒதுக்கப்படலாம். நீண்ட நாட்களாக அவருக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். எனவே அண்ணாமலையே ராஜாவுக்காக தலைமையிடம் பரிந்து பேசுவார் என பாஜக வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. எது எப்படியோ தமிழக அரசியலில் அதிமுக மற்றும் பாஜகயிடையே ஆடு புலி ஆட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது.
அமித் ஷாவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் பாஜக கால் பதிக்க வேண்டும் என்பது நீண்டநாள் கனவு. அதனால் அவர் நெளிவு சுளிவு உடன் நடந்து கொள்வார் என கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் முடிவு வந்த பின்னரே அவரது ஆட்டத்தை தொடங்குவார் என பாஜக டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.