அமெரிக்கா | தேர்தல் விதிமுறைகளை கடுமையாக்கும் ஆவணங்களிலும் கையெழுத்திட்ட ட்ரம்ப்! யாருக்கு சிக்கல்?
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அதில் ஒன்றாக, குடியேற்றத்தை தடுக்க, முறைப்படுத்த ஏகப்பட்ட விதிகளை மாற்றினார். சட்டவிரோத குடியேற்றம் மட்டுன்றி, சட்டப்பூர்வ குடியேற்றம் தொடர்பாகவும் அவர் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். விசா கட்டுப்பாடுகளிலும் புதிய நடைமுறைகளைப் புகுத்தியுள்ளார். வரிவிதிப்பு நடைமுறைகளையும் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக்கும் ஆவணங்களிலும் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி வாக்காளர் பதிவுக்கு குடியுரிமைக்கான ஆவணச் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அனைத்து வாக்குச்சீட்டுகளும் தேர்தல் நாளுக்குள் பெறப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கூட்டாட்சி தேர்தல்களில் வாக்களிக்கும் தகுதிக்கு பாஸ்போர்ட் போன்ற குடியுரிமைச் சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும். தேர்தல் நாளுக்குப் பிறகு பெறப்பட்ட தபால் வாக்குச்சீட்டுகளை ஏற்றுக்கொள்ள தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியல்கள் உள்ளிட்ட விவரங்களை கூட்டாட்சி நிறுவனங்களுடன் மாகாணங்கள் பகிர்ந்துகொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் அதிகாரிகள் இணங்க மறுத்தால், மாகாண நிதி நிறுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.