இறுதி சடங்குகள் செய்த மகள்கள்.. விடைபெற்றார் மனோஜ்.. சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம்!
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ், இதய சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை காலமானார். அவரது திடீர் மறைவு தமிழ்த் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
முன்னதாக, சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக இன்று அவரது வைக்கப்பட்டது. பின்னர் அங்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, மனோஜின் உடல், பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.
மின்மயானத்தில் அவரின் இரு மகள்கள் இறுதிச் சடங்குகளைச் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. மகனின் பிரிவால் மனமுடைந்து வாடிய பாரதிராஜாவை அவரின் உறவினர்கள் கைத்தாங்கலாக அழைத்துவந்தனர். இறுதிச்சடங்கில் பாக்யராஜ், வைரமுத்து, சீமான், இளவரசு, தயாரிப்பாளர் சிவா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்றனர்.