2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அதிமுக-பாஜக கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவில் இணைய தயார் என கூறியுள்ளார். டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் தயாராக இருந்தால் , நானும் இணைய தயார். அனைவரும் இணைந்தால் அதிமுக வெற்றி பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஒருபக்கம் கூட்டணியின் முடிவுகள் அறிவிப்பு, இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கைகள் என பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில், அதிமுக-பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மறுபக்கம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் திமுகவை தீய சக்தி என்றும், அதிமுகவை ஊழல் கட்சி என்றும் விமர்சித்து வருகிறது. மேலும் நடக்கவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக மிகப்பெரிய வாக்கு சிதைப்பராக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தசூழலில் ராமதாஸ் தலைமையிலான பாமக விஜயின் தவெக உடன் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படும் நிலையில், முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர் செல்வமும் தவெகவின் பக்கம் செல்வாரா அல்லது டிடிவி தினகரன் போல மீண்டும் அதிமுகவில் இணைவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்தசூழலில் இன்று தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர் செல்வம், அதிமுகவில் இணைய தயார் என்றும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவுசெய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
தேனி பெரியகுளத்தில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியபிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட காரணம் எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்களா என்பதை நிரூபிக்க தான் போட்டியிட்டேன். ஆனால் ராமநாதபு ரம் தொகுதியில் என்னை எதிர்த்து நின்றவர்கள் ஓ. பன்னீர் செல்வம் என்ற பெயரிலே 6 பேரை நிற்கவைத்து என்னை வீழ்த்த முயன்றனர். மக்களும், தொண்டர்களும் பன்னீர் செல்வம் பக்கம் இல்லை என்பதை நிரூபிக்க தான் அது நடந்தது.
பிரிந்து கிடக்கிற அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்களின் தலையாய கோரிக்கையாக இருந்துவருகிறது. அம்மா இருந்தபோது இருந்தசூழலை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய போராட்டம். தனிக்கட்சி தொடங்குவதோ, தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை.
எதிரும் புதிருமாக இருந்த டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். நாங்களும் இணைய வேண்டும் என்றுதான் சொல்கிறோம். டிடிவி தினகரனும் அந்தக் கோரிக்கையை அங்கு வலியுறுத்தினால், நாங்கள் இணைந்திடலாமே. அந்த வேலையை செய்தால் அதிமுக மாபெரும் வெற்றியடையும். அதிமுகவில் இணைய நான் ரெடி, டிடிவி தினகரனும், அவருடைய அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியும் ரெடியா’ என்று பேசினார்.