தவெக உடன் செல்கிறாரா ஓ. பன்னீர் செல்வம்..? சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்!
2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி முடிவுகள் பரபரப்பாக வெளிப்படுகின்றன. ஓ. பன்னீர் செல்வம் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார் என்பது இன்று தீர்மானிக்கப்படும். அதிமுக-பாஜக கூட்டணியில் அவர் இணைவாரா அல்லது விஜயின் தவெக பக்கம் செல்லவாரா என்பது பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. ஒருபக்கம் கூட்டணியின் முடிவுகள் அறிவிப்பு, இன்னொரு பக்கம் தேர்தல் அறிக்கைகள் என பரபரப்பான சூழல் நிலவிவரும் நிலையில், அதிமுக-பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மறுபக்கம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் திமுகவை தீய சக்தி என்றும், அதிமுகவை ஊழல் கட்சி என்றும் விமர்சித்து வருகிறது. மேலும் நடக்கவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தவெக மிகப்பெரிய வாக்கு சிதைப்பராக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தசூழலில் ராமதாஸ் தலைமையிலான பாமக விஜயின் தவெக உடன் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படும் நிலையில், முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர் செல்வமும் தவெகவின் பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
தவெக அல்லது NDA.. யார் பக்கம் சாய்கிறார் ஓபிஎஸ்!
2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி கணக்குகள் தேர்தல் நெருங்க நெருங்க வெளிப்பட்டு வருகின்றன. ஒருபக்கம் அதிமுக-பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமகவும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவும் இணைந்துள்ளன.
மறுமுனையில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு மற்றும் அதிகாரம் பகிர்வு உள்ளிட்ட விசயங்களில் மோதல் நீடித்துவருவதாக சொல்லப்படுகிறது. இன்னும் கூட்டணிக்கு வெளியில் தேமுதிக, ராமதாஸ் தலைமையிலான பாமக மற்றும் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பெரிய தலைகள் இருக்கின்றன.
இப்படியான சூழலில் இன்று யாருடன் கூட்டணிக்கு செல்லப்போகிறோம் என்ற முடிவை ஆதரவாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் வெளிப்படுத்துவார் என சொல்லப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என சொல்லிவந்த ஓ.பன்னீர் செல்வம், இன்றைய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு யாருடன் கூட்டணிக்கு செல்வார் என்ற முடிவை அறிவிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஓ.பன்னீர் செல்வத்தை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெளிப்படையாக அழைத்துவரும் நிலையில், ஓ.பன்னீர் செல்வம் அதிமுக-பாஜக கூட்டணிக்கு செல்லவிருப்பதாகவும், அவருக்கான தொகுதி பங்கீடு குறித்தும் பேசப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இந்தசூழலில் தற்போது ஓ.பன்னீர் செல்வம் தவெக பக்கமும் செல்ல வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் ஓ.பன்னீர் செல்வம் யார் பக்கம் என்பது தெரியவரும்..

