நாகர்கோவில் அருகே ரயில் மீது கல்லெறிந்த வடமாநில இளைஞர் கைது pt
தமிழ்நாடு

நாகர்கோவில் | ரயில் மீது கல்லெறிந்த வடமாநில இளைஞர்.. பெண்ணிற்கு காயம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ற அந்தியோதயா ரெயில் மீது கல் வீசிய வடமாநில வாலிபரை நாகர்கோவில் ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PT WEB

நாகர்கோவில் அருகே ரயில் மீது கல்லெறிந்ததால், ரீனா அன்னமேரி என்ற பெண் காயமடைந்தார். ரெயில்வே போலீசார் சிசிடிவி மூலம் 19 வயது பாபுரா பாராபோகேவை கைது செய்தனர். அவர் குடிபோதையில் ரயில் மீது கல் வீசியதாக கூறப்படுகிறது.

நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக தாம்பரத்துக்கு தினமும் அந்தியோதயா ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை 3.50 மணி அளவில் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

ரயில் மீது கல்வீச்சு

இந்த ரெயிலில் 5-வது பெட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியை சேர்ந்த டேவிட், அவருடைய மனைவி ரீனா அன்னமேரி (வயது 67) ஆகியோர் சென்னைக்கு பயணம் செய்தனர்.

ஆரல்வாய்மொழி அருகே ரெயில் வந்து கொண்டிருந்த போது மர்மநபர்கள் திடீரென்று ரெயில் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் ஒரு கல், 5-வது பெட்டி பக்கவாட்டு ஜன்னல் கண்ணாடி மீது விழுந்தது. அந்த கண்ணாடியில் ஓட்டை விழுந்து கண்ணாடி துகள்கள் சிதறின.

ஜன்னல் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ரீனா அன்னமேரி மீது கண்ணாடி துண்டுகள் விழுந்தன. இதில் அவருக்கு தலை மற்றும் முகம் பகுதியில் காயம் ஏற்பட்டது.

கைதுசெய்த காவல்துறை..

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில் நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவ மையத்தின் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

மாலை 5 மணி அளவில் நெல்லை சந்திப்பில் 3-வது பிளாட்பாரத்துக்கு ரெயில் வந்ததும் கல்வீச்சு சம்பவத்தில் காயமடைந்த ரீனா அன்னமேரிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் சென்னைக்கு முக்கிய நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதால் அங்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறி பயணத்தை தொடர்வதாக தெரிவித்தார். இதையடுத்து நெல்லை சந்திப்பில் இருந்து அந்தியோதயா ரெயில் 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. விசாரணையில் ஒடிசாவை சேர்ந்த 19 வயது பாபுரா பாராபோகே என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். பாபுரா பாராபோகே மற்றும் இவரது நண்பரும் ஆரல்வாய்மொழி ரயில் தண்டவாளத்திலிருந்து மது அருந்தி கொண்டிருந்த போது ரயில் வந்ததால், அங்கிருந்து எழுந்துசென்ற அந்த இளைஞர் ரயில் மீது கல் வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் பாபுரா பாராபோகேவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.