2026 சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் திமுகவுடன் இழுபறி நீடித்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக 25 கட்சிகளுடனும், எதிர்கட்சியான அதிமுக 14 கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த சூழலில் அதிமுகவில் தொகுதி பங்கீடு குறித்த விபரம் இன்னும் 4 நாட்களில் தெரிவிக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கும் நிலையில், திமுக தங்களின் கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை ஒவ்வொன்றாக முடித்து வருகின்றன.
அந்தவகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடனான தொகுதிப் பங்கீடு இன்னும் இழுபறியாக இருந்துவரும் நிலையில், அக்கட்சி இறுதி முடிவுக்கு முன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில், மாநில செயற்குழு கூட்டமும், அதனைத்தொடர்ந்து மாநில குழு கூட்டமும் நடைபெறவுள்ளது.
திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரும் நிலையில், திமுக 5 தொகுதிகளை மட்டுமே தர முன்வந்துள்ளது. இதனால் இழுபறி நீடிக்கும் சூழலில், இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நான்காவது நாளாகநேர்காணல் நடைபெற்ற நிலையில் முதல்வர், துணை முதல்வர் தொகுதிகளில் யாரும் நேர்காணலில் கலந்துகொள்ளவில்லை. காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன், திருவண்ணாமலை தொகுதியில் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் நேர்காணலில் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் தொகுதியில் அமைச்சர் பெரியகருப்பன், அருப்புக்கோட்டை தொகுதியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரும் நேர்காணலில் பங்குபெற்றனர். இந்ததொகுதிகளில் அமைச்சர்களோடு சேர்த்து விருப்பமனு கொடுத்தவர்களுக்கும் நேர்காணல் நடைபெற்றது. கொளத்தூர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேனி தொகுதிகளில் மட்டும் யாரும் நேர்காணலில் கலந்துகொள்ளவில்லை.