பரபரப்பான செய்திகளுக்குப் பேர் போனவர் நித்தியானந்தா. இந்த முறை, அவர் மரித்து விட்டதாகப் பரவுகிறது பரபரப்பு. நித்தியானந்தாவுக்கு என்ன நடந்தது, என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
எப்படிப்பட்ட இக்கட்டான சூழலிலும், மாறவே மாறாத சிரிப்புதான் இவரது அடையாளம். இளம் வயதில் துறவறம் பூண்டு, ஆசிரமத்தை தொடங்கி, உலகம் முழுவதும் சீடர்களை சம்பாதித்தவர் இவர். முன்னால் நின்று பேசுவோரை, தனது வசீகர வார்த்தைகளால் அப்படியே அபகரித்துக் கொள்வது, இவரது தனித்திறமை. இதிலேயே தெரிந்து விடும், நாம் சொல்ல வருவது நித்தியானந்தாவைத் தான் என்று. ராஜசேகர் என்ற இயற்பெயருடன் திருவண்ணாமலையில் ஓர் ஆசிரமத்தில் தொண்டு செய்து வந்தவருக்கு, திடீரென வந்தது வாழ்வு. கர்நாடகாவின் பிடதியை தலைமையிடக் கொண்டு நாடு முழுவதும் 41 ஆசிரமங்கள். அத்தனை ஆசிரமங்களுக்கும் வந்து குவிந்த சீடர்கள், காணிக்கை என்ற பெயரில் அள்ளிக் கொடுத்ததில், செல்வச் செழிப்பில் கொழித்தார் நித்தியானந்தா.
ஒரு கட்டத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளும், பாலியல் வழக்குகளும் அடுத்தடுத்து அட்டாக் செய்தன. இந்தியா முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களிலும் புகார்கள் பதிவாகின. பாலியல் வழக்குகள் மட்டுமின்றி, கடத்தல், நிதி தொடர்பான வழக்குகளும் அணிவகுத்தன. இதற்கெல்லாம் அசந்து விடுவேனா என மைன்ட் வாய்ஸில் நினைத்த நித்தியானந்தா, நாட்டை விட்டே எஸ்கேப் ஆனார்.
எனக்கென ஒரு நாடு... என் நாடு என் மக்கள் என கைலாசா என்ற ஒரு நாட்டையே உருவாக்கினார். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்ற சந்தேகம் ஓயும் முன்பே, கைலாசாவின் அதிபராக தன்னையே அறிவித்துக் கொண்டார். அந்த நாட்டுக்கென தனி கொடி, பாஸ்போர்ட், ரூபாய் நோட்டு, நாணயம், ஸ்டாம்ப்புகள் என அறிவித்து மாஸ் காட்டினார். இந்த கைலாசா, வடக்கு பசிபிக் தீவுகளில் இருப்பதாக சொல்கிறார்கள். சிவபெருமான் போலவும், வெங்கடாஜலபதி போலவும் விதவிதமான கெட் அப்-களில் ஆன்லைனில் தோன்றி, அதிரவிடும் கருத்துகளைக் கூறி, சொற்பொழிவாற்றுவது நித்தியின் ஸ்டைல். அப்போது கிராஃபிக்ஸ் மூலம் கலர் கலராக ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சி, அருள்பாலித்து, தனது சீடர்களை சிலிர்க்க வைத்தார்.
நித்தியானந்தா என்றாலே Vibe தான் என்று இருந்த சூழலில் தான், அவருக்கு உடல்நலக்குறைவு என்றும் கோமா நிலைக்கு சென்றுவிட்டார் என்றும் தகவல் பரவியது. ஒரு கட்டத்தில் அவர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியதால், அதில் உண்மையில்லை என நித்தியானந்தாவே வீடியோ ஒன்றில் பேசினார். அந்த வீடியோவில், பழைய உற்சாகம் இன்றி சோர்வாகத்தான் இருந்தார். நித்தி குறித்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக தகவல்கள் பரவுவது வழக்கமாக இருந்தது. இந்த முறை, நித்தியானந்தா இறந்துபோனதாக, அவரது சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் வீடியோவில் பேசியிருந்தார். இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர்த் தியாகம் செய்ததாக கூறியிருந்தார். மருமகன் கூறியதுபோல, நித்தி உயிரிழந்திருந்தால், அடுத்து கைலாசா நாடு என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நித்தியின் தியான பீடம், நித்தியின் பெயரில் உள்ள நான்காயிரம் கோடி சொத்துகள், இவையெல்லாம் என்னவாகும் என்ற கேள்விகளும் அணிவகுக்கின்றன. இந்தச் சொத்துகள் எல்லாம், நித்தியானந்தாவின் பிரியத்துக்கு உரிய சிஷ்யையான நடிகை ரஞ்சிதாவுக்கே சென்று சேரும் என்ற கருத்துகளும் நிலவுகின்றன. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, தன் மீது உள்ள வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, இறந்துவிட்டதாக நாடகமாடுகிறாரா என்ற ஐயமும் எழுந்துள்ளது. பொலிவியாவில் பழங்குடியினரின் ஐந்து லட்சம் ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக நித்தியானந்தா புதிய வழக்கில் சிக்கியுள்ளதாகவும், இதில் கைது செய்யப்படாமல் இருக்க இறப்பு என நாடகமாடுகிறாரா என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், நித்தியின் மரணம் தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வமான எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்பதுதான், இந்த விஷயத்தின் ஹைலைட்.