புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக அமைச்சரவை பங்கீடு, சபாநாயகர் பதவி குறித்து அழுத்தம் கொடுக்க, முதலமைச்சர் ரங்கசாமி தமிழக வெற்றிக் கழகத்துடன் நெருக்கம் காட்டுகிறார். விஜய் தலைமையிலான தவெக ஆதரவு, சுயேச்சை எம்எல்ஏக்கள் இணைந்து 15 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைக்கும் சூழலில், பாஜகவுக்கு எதிராக பேச்சுவார்த்தை ஆயுதமாக இதை பயன்படுத்தும் அரசியல் கணக்கு தெளிவாகிறது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடத்தை பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் புதுச்சேரி மாநில முகமாக இருக்கும் ரங்கசாமியின் என்.ஆர் காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி உடன் அமைச்சர்களாக என்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவும், பாஜகவைச் சேர்ந்த நமச்சிவாயமும் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டுள்ளனர். இன்னமும் சபாநாயகர் மற்றும் மூன்று அமைச்சர்கள் நியமிக்க வேண்டிய நிலையில், பாஜகவின் அழுத்தத்தால் தாமதம் ஆகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பாஜகவிற்கு சபாநாயகர், உள்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியவை ஒதுக்கப்பட்டது. இந்த முறையும் சபாநாயகர் உட்பட இரண்டு துறைகளை பாஜக கேட்டு வருவதோடு லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மாட்டினும் ஒரு இலாகா ஒதுக்குமாறு ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் சபாநாயகர் பதவியையும் ஜோஸ் சார்லஸ் மாட்டினுக்கு இலாகா ஒதுக்குவதையும் ரங்கசாமி விரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்து போட்டியின் தொடக்க விழாவில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ஆதவ் அர்ஜுனா, "நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம்" என தெரிவித்தார்.
கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் உடன் நெருக்கமான நட்போடு ரங்கசாமி இருந்து வருகிறார். இந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் இரண்டு இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சி ஒரு இடத்திலும் புதுச்சேரியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 16 சதவீத வாக்குகளுடன் புதுச்சேரியில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது.
இந்நிலையில் தான் ரங்கசாமி பாஜகவிற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக விஜய் கட்சியுடன் நெருக்கம் காட்டுகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவு இருந்தால் 15 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு ரங்கசாமி பெறுவார். அதே நேரத்தில் இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்கள் ரங்கசாமியின் வசம் இருப்பதால் தமிழக வெற்றிக் கழகத்தின் துணைகொண்டு புதுச்சேரியில் ரங்கசாமியால் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்கிற நிலையில் தற்போதைக்கு பாஜகவில் இருந்து ரங்கசாமி விலகுவதற்கான வாய்ப்பில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
புதுச்சேரி ஒரு யூனியன் பிரதேசம் என்பதால் அதிக அதிகாரம் மற்றும் நிதி பங்கீடு போன்றவற்றிற்கு மத்திய அரசின் உதவி தேவை என்பதால் பாஜக கூட்டணியில் இருந்து ரங்கசாமி உடனடியாக விலகுவது சாத்தியம் இல்லாவிட்டாலும், பாஜகவிற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக விஜய்யை ரங்கசாமி பயன்படுத்துவார் என்று கூறுகிறார்கள் பார்வையாளர்கள்.
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ள நிலையில் புதுச்சேரியில் வழிகாட்டுதல் குழு கூட்டப்பட்டு முடிவு எடுக்கப்படும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். வரும் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தோடு யார் கூட்டணி அமைக்கிறார்களோ அவர்களுக்கு புதுச்சேரியில் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டும் நிலையில்
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில் முதலமைச்சர் விஜய், த.வெ.க பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆனந்த் ஆகியோர் ரங்கசாமிக்கு நெருக்கம் என்பதால், புதுச்சேரியைப் பொறுத்தவரை தமிழக வெற்றி கழகம் புதிய அரசியல் வியூகம் வகுக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.