செங்கோட்டையன் pt web
தமிழ்நாடு

செங்கோட்டையனுக்கு ஷாக் கொடுக்கும் தலைமை? கோபியில் புது அலுவலகம்.. பின்னணி என்ன?

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோட்டை என்று கூறப்படும் நிலையில் தற்போது கோபியில் அதிமுக அலுவலகம் ஒன்று புதிதாக உருவாகி வருவது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் சுப்ரமணியம்

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கோட்டை என்று கூறப்படும் நிலையில் தற்போது கோபியில் அதிமுக அலுவலகம் ஒன்று புதிதாக உருவாகி வருவது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையம் அதிமுக அலுவலகத்தில் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் செங்கோட்டையன் கடந்த செப்டம்பர் 5ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து அதிமுகவில் இருந்து பிரிந்த தலைவர்கள் எல்லாம் ஒன்றுபட வேண்டுமென்ற தனது கருத்தை கட்சி தலைமைக்கு தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் வெளிப்படுத்த வேண்டிய கருத்தை பொது வெளியில் வெளிப்படுத்தியதாக கூறி அதிமுக தலைமை செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சி பதிவுகளில் இருந்து உடனடியாக நீக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டது. செங்கோட்டையனுக்கு பதிலாக, அவரது கட்சிப்பொறுப்பில் முன்னாள் அமைச்சரும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 30-ஆம் தேதி செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்ட ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோபிசெட்டிபாளையம் அந்தியூர், அத்தாணி, வாணி, புத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டதிற்கான அதிமுக அலுவலம்

மேலும், ஏற்கனவே கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படவர்களுக்கு பதிலாக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு 35 க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகளை தலைமை கழகம் நியமித்துள்ளது. மற்ற பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டாலும் கூட ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருக்கான பதவி இதுவரை நியமிக்கப்படாமல் ஏ.கே.செல்வராஜே பொறுப்பு செயலாளராக உள்ளார்.

இந்நிலையில், கோபி அருகே உள்ள நல்லகவுண்டன்பாளையம் பாலாஜி நகரில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டதிற்கான புதிய அதிமுக அலுவலகம் தயார் செய்யப்படுகிறது. தீவிரமாக வேலைகள் நடைபெற்று வரும் கட்சி அலுவலகத்திற்கு முன்னும் பின்னும் ஏராளமான கார்கள் நிறுத்தக்கூடிய வசதிகள் மட்டுமில்லாமல் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோபி, பவானிசாகர், அந்தியூர் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு சில நாட்களுக்குள் அலுவலக பணிகள் நிறைவடைந்து திறப்பு விழா நடைபெறவுள்ள நிலையில் இவ்விழாவில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், வேலுமணி, தங்கமணி, பொறுப்பு மாவட்ட செயலாளர் ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு அலுவலக திறப்பு விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்வார் என்றும் செய்திகள் வெளியாகின்றன.

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டதிற்கான அதிமுக அலுவலம்

மேலும், கடந்த 3ம் தேதி கூட அமைதியாக இருப்பது வெற்றிக்கு வழிவகுக்கும் என செங்கோட்டையன் கூறி சென்ற நிலையில் தற்போது கோபியில், புதிய புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் தயாராகி வருவது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.