மதுரை, கோவை மெட்ரோ: மத்திய அரசின் ஒப்புதல் எப்போது?
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைப்பதில் நீண்ட தாமதமாவதால் அந்த ஊர் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 32 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை 2024 பிப்ரவரியிலேயே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசு பரிந்துரைத்த, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 19 மாதங்களாகியும் ஒன்றிய அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை. இவ்விரு மெட்ரோ திட்டங்களும் முதல் கட்ட பரீசிலனையில் இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர் தயானந்த கிருஷ்ணன் RTI மூலம் தகவல் பெற்றுள்ளார்.
மத்திய அரசின் ஒப்புதல் தாமதமாவதால் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட தொடக்கப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கான்பூர், ஆக்ரா போன்ற பிற மாநில நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் சில மாதங்களிலேயே ஒப்புதல் பெற்ற நிலையில், தமிழகத்தின் திட்டங்கள் தாமதமாவது மத்திய அரசின் பாகுபாட்டையும் காட்டுவதாக மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு திட்டம் எதிர்பார்த்தபடி முன்னேறவில்லை என்றால், அந்தத் திட்டத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விரைவில் முன்னேற்றம் அடைய வழிவகை செய்வார்கள். ஆனால் தமிழக அரசு இதுபோன்ற முக்கியமான மத்திய திட்டங்களுக்கு இதுவரை சிறப்பு அதிகாரிகளை நியமிக்காததே காலதாமதத்திற்கான முக்கிய காரணம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நம்புவதாக மெட்ரோ ரயில் திட்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்