செய்தியாளர்: எம்.துரைசாமி
நாமக்கல் மாவட்டம் வலையப்பட்டி அடுத்த அ.வாழவந்தி பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் (55) - பூங்கொடி (50) தம்பதியர். இவர்களது மகன் சுரேந்திரன் (28) என்பவருக்கும் வேட்டாம்பட்டியைச் சேர்ந்த சினேகா என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சினேகா, சில மாதங்களிலேயே கணவன் வீட்டாருடன் சண்டையிட்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று காலை செல்வராஜ் வீடு வெகுநேரமாக திறக்கப்படாமல் இருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் எருமைப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், வீட்டை திறந்து பார்த்துள்ளனர். அப்போது செல்வராஜ், பூங்கொடி, சுரேந்தர் ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சடலங்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் ஏ.எஸ்.பி ஆகாஷ் ஜோஷி சம்பவ இடத்தை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டது குறித்து எருமைப்பட்டி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.