தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு –தனித்தீவு போல் காட்சியளிக்கும் புன்னக்காயல்
செய்தியாளர்: பே.சுடலைமணி செல்வன்
தூத்துக்குடி மாவட்டம் உட்பட தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளில் இருந்தும் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மழை நீரின் அளவும் அதிக அளவு தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி தாமிரபரணி ஆற்றில் சுமார் 30 ஆயிரம் கனஅடி நீர் வரை வெளியேற்றப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் முதல் தடுப்பணையாக விளங்கும் மருதூர் அணைக்கட்டில் இருந்து மட்டும் சுமார் 25 ஆயிரம் கனஅடி நீர் தற்போது வரை வந்து கொண்டிருக்கிறது. இந்த தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீர் அனைத்தும் வங்கக்கடலில் கடைசியாக கடக்கும் இடம் தான் திருச்செந்தூர் அருகில் உள்ள புன்னக்காயல். இந்த புன்னக்காயல் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீர் முழுவதும் இந்த புன்னக்காயல் வழியாக கடலில் கலந்து வருகிறது. தாமிரபரணி தண்ணீர் அதிகமாக வருவதால் புன்னக்காயல் ஊருக்குள் நேற்றைய தினம் மழை வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் இருந்த பொதுமக்கள் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினர்.
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதி தனித்தீவு போல காட்சியளிக்கிறது. பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.