செய்தியாளர்: துரைசாமி
+2 பொதுத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் துவங்கி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 86 தேர்வு மையங்களில் நடைபெறும் +2 பொதுத் தேர்வில் 9154 மாணவர்களும், 9304 மாணவிகள் என மொத்தம் 18,461 பேர் +2 தேர்வு எழுதுகின்றனர்..
இந்த பொதுத் தேர்வுக்காக 86 முதன்மை கண்காணிப்பாளர்கள், 86 துறை அலுவலர்கள், 4 கூடுதல் துறை அலுவலர்கள், 200 பறக்கும் படை அலுவலர்கள், உறுப்பினர்கள், 24 வழித்தட அலுவலர்கள், 4 வினாத்தாள் கட்டுபாட்டாளர்கள் என மொத்தம் 1260 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பொம்மைக்குட்டை மேட்டில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவி கார்த்திகா ஸ்ரீ, செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வெழுத வந்துள்ளார். அப்போது அந்த மாணவி, தனது வீட்டருகே தவறி விழுந்துள்ளார். இதில், அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
இதையடுத்து தலையில் கட்டுப்போட்டவாறு ஆர்வமுடன் தேர்வெழுத வந்தார். அவரை ஆசிரியர் அழைத்துச் சென்று தேர்வெழுத அனுமதித்தனர். விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த நிலையிலும் +2 தேர்வெழுத வந்த மாணவியை அனைவரும் பாராட்டினர்.