சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத கட்சி என்று பிரதமர் தொடங்கி உள்துறை அமைச்சர், நூற்றுக்கணக்கான ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில் ஐபிஎஸ் வருண்குமார் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான 5வது மாநாட்டில் நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவங்கி வைத்த இந்த மாநாட்டில், திருச்சி எஸ்பியாக இருக்கும் ஐபிஎஸ் வருண்குமாருக்கும் அழைப்புவிடப்பட்டது. அதில் கலந்துகொண்டு, இணையதள மிரட்டல், சைபர் கிரைம் போன்ற விவகாரங்கள் குறித்தும், அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உரையாற்றுமாறு வருண்குமாருக்கு அழைப்பிடப்பட்டது.
அதன்படி, மாநாட்டில் பங்கேற்ற வருண்குமார் ஐபிஎஸ், பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். தனது குடும்பம் இணையதள மிரட்டல், சைபர் கிரைமால் பாதிக்கப்பட்டது குறித்து பேசிய அவர், நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய ஒரு பிரிவினைவாத இயக்கம் என்றும், நாதகவால் தானும் தன்னுடைய குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றும் பகிரங்கமாக அறிவித்தார்.
தனது குடும்ப போட்டோவை நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த ஒருவர் மார்ஃபிங் செய்து இணையத்தில் பதிவிட்டதாகவும், இதுதொடர்பாக 3 எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளதாகவும் கூறிய அவர், ஃபேஸ்புக், இஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற சமூகவலைதளங்களில் அவதூறாக போட்ட பதிவுகளை நீக்க கோரியும், அவை இன்னும் நீக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில், நாம் தமிழர் கட்சியை ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று அவர் கூறியிருப்பது தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாக மாறியுள்ளது.
காரணம், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், திருச்சி எஸ்பியாக இருக்கும் வருண்குமார் ஐபிஎஸ்ஸுக்கும் நீண்ட நாட்களாகவே புகைச்சல் இருந்து வருகிறது. தனது குடும்பம் மீது நாதகவினரே அவதூறு கருத்துக்களை பரப்புவதாக குற்றம்சாட்டும் வருண்குமார், அவதூறாக பேசியதாக நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகனை கைது செய்தார்.
திருச்சி எஸ்பியாக வருண்குமார் இருக்க, புதுக்கோட்டை எஸ்பியாக அவரது மனைவி இருக்கிறார். இந்த நிலையில், வருண் ஐபிஎஸ்ஸுக்கு குறிப்பிட்ட சாதிகள் மீது பிறப்பு வெறுப்பு என்றும், அவர் அரசு அதிகாரியாக இல்லாமல், திமுக ஐடி விங் ஊழியராக வேலை செய்வதாகவும் கடுமையாக விமர்சித்தார் சீமான்.
இப்படியாக, நாதகவுக்கும் வருண்குமார் ஐபிஎஸ்ஸுக்கும் முட்டல் மோதலாகவே சென்ற நிலையில், சமூகவலைதளமான எக்ஸ் பக்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார் வருண்குமார். அதே நேரம் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறியிருந்தார்.
தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் வருண்குமாருக்கும் இடையே ஒரு பெரும் பகையே உருவாகியுள்ள சூழலில், நாதகவை ஒரு பிரிவினைவாத இயக்கமாக அடையாளப்படுத்துவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமையின் கண்காணிப்பு வளையத்தில் இருக்கும் நாதகவுக்கு, கூடுதல் அழுத்தம் வர வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.
மத்திய அரசிடம் பிரிவினைவாத இயக்கங்களை தடைசெய்யும் அதிகாரம் இருப்பதால், நாம் தமிழர் கட்சிக்கு நெருக்கடியாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வருண் குமாரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக்,
“துணிவு, திராணி ஏதும் இருந்தால் உங்க பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நேரடியாக அரசியலுக்கு வாங்க..மோதுவோம்.. அதைவிட்டுட்டு, கோழைத்தனமாக திமுக அரசின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு வாய்ச்சவடால் விடாதீர்கள்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.