ஆதவ் அர்ஜுனா - நயினார் நாகேந்திரன் web
தமிழ்நாடு

தவெக உடன் கூட்டணி பேசவில்லை.. ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது! - நயினார் நாகேந்திரன்

தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் 90 தொகுதிகள், 2 1/2 ஆண்டுகள் முதல்வர் பதவி ஆஃபர் வழங்கப்பட்டதாகவும் ஆதவ் அர்ஜுனா கூறியிருந்த நிலையில், தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Rishan Vengai

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழக அரசியலில் புதுமுகமாக களமிறங்கிய விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், முதல்முறையாக 2026 சட்டப்பேரவை தேர்தலில் களம் காணவிருக்கிறது. தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஆட்சியில் பங்கு எனக் கூறியும் இதுவரை எந்தக் கட்சியும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்குச் செல்லவில்லை. இதையடுத்து, தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

இதனிடையே விஜய் நடித்த ’ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காதது மற்றும் கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை என மத்திய அரசு அவருக்கு அழுத்தம் தந்து கூட்டணிக்கு வற்புறுத்துவதாகவும் சொல்லப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி, விஜய்

அதேநேரத்தில், திமுக போட்டியாகக் கருதப்படும் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக முயற்சிப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என அதிமுக பொதுச்செயலர் கே.பழனிசாமி கூறியுள்ள நிலையில், பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என தவெகவும் மறுப்பு தெரிவித்தது.

ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, தவெக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை பேசப்பட்டதாக பேசியது பேசுபொருளானது.

ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது..

தவெக உடன் பேரம் பேசப்பட்டதாக கூறிய ஆதவ் அர்ஜுனா, “90 தொகுதிகள் தருவதாக பேரம் பேசினார்கள், ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதல்வராக இருக்கலாம் என பேரம் பேசினார்கள். அத்தனை பேரத்திற்கு பிறகும் அண்ணன் எனக்கு ஆஃபர் வேண்டாம், தமிழக மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் மதசார்பற்ற வலிமையான ஆட்சியை உருவாக்குவோம் என கூறினார். பதவிக்காக டெல்லிக்கு அடிபணிய மாட்டோம்” என பேசியிருந்தார்.

இந்நிலையில் தவெக உடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தியதா என்ற கேள்வி எழுந்தது. இந்தசூழலில் தான் தவெக உடன் கூட்டணி பேசப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆதவ் அர்ஜுனா யாரென்றே தெரியாது என்று பதிலளித்துள்ளார்.