”தலைவர் ரஜினி மீது அன்பு மட்டுமே..” - தன்னுடைய பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு!
தவெக பொதுக்கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, ரஜினி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்டார். ரஜினி மீது அவருக்கு வெறுப்பு இல்லை, அன்பு மட்டுமே உள்ளது எனவும், தன்னுடைய பேச்சால் வருத்தம் ஏற்பட்டால் மன்னிக்கவும் கேட்டார். ரஜினி மீது அவதூறு செய்ததையே மிரட்டல் என கூறியதாக தெளிவுபடுத்தினார்.
சமீபத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய தவெக தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு பிரபலமான தலைவராக ரஜினி அரசியலுக்கு வர நினைத்தார். திமுக குடும்பம் அவருக்கு மிரட்டல் விடுத்து அரசியலுக்கு வராமல் பார்த்துக்கொண்டார்கள். ஆனால், திமுகவை எதிர்ப்பதற்கு நம் தலைவருக்கு மட்டுமே மனவலிமை இருக்கிறது என பேசினார்.
ரஜினி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியது பெரும் விவாதப் பொருளாகிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு அறிக்கை வெளியிட்ட ரஜினி, ’காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்’ என கண்டனத்தை பதிவுசெய்திருந்தார்.
இந்தசூழலில் சென்னையில் இன்று நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா, ரஜினி குறித்த தன்னுடைய பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
தலைவர் ரஜினி மீது அன்பு மட்டுமே..
சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தூத்துக்குடி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை திசை திருப்பவே ரஜினி குறிப்பிட்டு நான் பேசியதை கடந்த 5 நாட்களாக பேசுபொருளாக்கி இருக்கிறார்கள். தலைவர் ரஜினி சார் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை, உங்கள் மீது எங்களுக்கு அன்பு மட்டும்தான் இருக்கிறது. தலைவர் ரஜினி மீது அவதூறு மற்றும் பொய்பிராசாரங்கள் செய்ததையே மிரட்டல் எனக் கூறினேன்.
நான் பேசியதன் நோக்கம் மாறி என்னுடைய பேச்சால் உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டு இருந்தால் என்னுடைய வருத்தத்தையும் மன்னிப்பையும் பகிரங்கமாக கேட்டுக் கொள்கிறேன். என்னைவிட வயதில் மூத்தவர் நீங்கள்.. உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது” என பேசினார்.

