kamalhaasan TR Balu
kamalhaasan TR Balu pt desk
தமிழ்நாடு

குஜராத் மாடல் - “பணக்காரன் சிரிப்பில் இறைவனை காண முடியாது” – பரப்புரையில் கமல்ஹாசன் விமர்சனம்

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி முகப்பேர் பகுதியில் நாடாளுமன்ற வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.

பரப்புரையில் கமல்ஹாசன் - டி.ஆர்.பாலு

அப்போது பேசிய அவர்...

‘இந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு செலுத்தினால் அடுத்து தேர்தலே இருக்காது’

“டிஆர்.பாலு பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளார்.. இன்னும் நேரம் இருந்தால் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவார். ஆனால், ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மக்கள் யோசித்து செயல்பட வேண்டும்.

இந்த தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு செலுத்தினால் அடுத்து தேர்தலே இருக்காது. அப்படியே தேர்தல் நடந்தாலும் வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஒரேயொரு பட்டன், ஒரேயொரு சின்னம், ஒரேயொரு மொழிதான் இருக்கும்.

‘இங்கு சீட்டுக்காக வரவில்லை நாட்டுக்காக வந்திருக்கிறேன்’

இந்தி வாழட்டும். ஆனால் எங்கு வாழனுமோ அங்கு. என் மொழியை அழித்துவிட்டு அடுத்த மொழியை கற்க மனம் வராது. இங்கு நான் சீட்டுக்காக வரவில்லை, நாட்டுக்காக வந்திருக்கிறேன். அடுத்த கட்டத்திற்கு போவதற்காகதான் அரசியலில் வந்துள்ளேன். அரசியல் என்பது பதவிக்கோ நாற்காலிக்கோ அல்ல ஜனநாயத்திற்காகதான். அதில், அருகதையற்றவர்கள் அமரக்கூடாது.

Kamalhaasan election campaign

‘குஜராத் மாடல்’

அங்கு ஒரு குஜராத் மாடல் உள்ளது. பணக்காரன் சிரிப்பில் இறைவனை கண்டு வருகின்றனர். பணக்காரன் சிரிப்பில் இறைவனை காண முடியாது. வெளிநாட்டு தலைவர்கள் வரும்போது குடிசையை திரை போட்டு ஏன் மறைக்க வேண்டும்? ஏழையின் சிரிப்பில்தான் இறைவனை காணமுடியும்.

மழை பாதிப்பில் 6 ஆயிரம் கோடி தேவைப்பட்ட நிலையில், ஒரு ரூபாய் கூட தராத மோடி, எட்டு முறை தேர்தல் நேரத்தில் வருகிறார். வாக்கு மட்டும் வேண்டும். மக்கள் வேண்டாம்.

‘ஒன்றிய அரசின் வாஷிங் மெஷின்’

நீங்கள் எல்லாம் வாஷிங் மெஷின் கேள்விப்பட்டு இருப்பீர்கள். உலகத்திலேயே அற்புதமான வாஷிங் மெஷினை ஒன்றிய அரசு கண்டுபிடித்து இருக்கிறது. அது என்னவென்றால், நீங்கள் தேர்தல் நிதி கொடுத்தால் அது எந்த கலர் பணமாக இருந்தாலும் வாஷிங் மெஷினில் சென்றவுடன் வெள்ளையாக மாறிவிடும்.

10 ஆண்டுகளாக ட்ரெய்லரை பார்த்துள்ளோம் என்கின்றனர். தொடர்ந்து ஆட்சி செய்ய விட்டால் முடிந்துவிடும். ஆகவே அதை தடுக்க வேண்டும். தடுப்பதற்கான ஏற்பாட்டை நிச்சயம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் நாளை நமதாகும்” என்று பேசினார்.